Published : 06 Jan 2018 01:02 PM
Last Updated : 06 Jan 2018 01:02 PM

போக்குவரத்து துறை நஷ்டத்திற்கு திமுக, அதிமுக ஆட்சியாளர்களே காரணம்: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

போக்குவரத்து துறையின் நஷ்டத்திற்கு திமுக, அதிமுக ஆட்சியின் முறைகேடு தான் காரணம் என்று அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேட்டி அளித்த அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:

“போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இரண்டு நாட்களாக 22000 பேருந்துகள் இயங்கவில்லை. போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் ஒன்று சேர்ந்து போராடி வருகின்றனர்.

22 முறை பேச்சு வார்த்தை நடந்துள்ளது. அரசு ஊழியர்களுக்கு 7 வது ஊதியக்குழு ஒப்பந்தப்படி ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் போக்குவரத்து துறை பொதுத்துறை இவர்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற தவறி இருக்கிறது. அரசு ஊழியர்களுக்கு 2.57 உயர்வு அளிக்கப்பட்டுள்ளது, ஆனால் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 2.42 மட்டுமே அளிப்பதாக அரசு தரப்பு தெரிவிக்கின்றனர்.

போக்குவரத்து துறையில் அடிப்படை ஊதியம் 19,500 ரூபாய் கேட்டுட்டுள்ளனர், அரசு 16,300 ரூபாய் அளிப்போம் என்கிறது. அது மட்டும் அல்ல ரூ.4500 கோடி நிலுவையில் உள்ளது. கடந்த காலத்தில் திமுக அதிமுக இரண்டு கட்சிகளும் சேர்ந்து போக்குவரத்து துறையை நட்டத்தில் இயங்கி தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துள்ளனர்.

20 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் இருக்கிறது. இதற்கு காரணம் அதில் நடக்கும் லஞ்சம், ஊழல் தான் வேறொன்றும் கிடையாது. தனியார் துறைகள் லாபத்தில் இயங்குகிறது. அரசு நஷ்டத்தில் இயங்குகிறது. இன்று தமிழக மக்கள் ஏழை எளிய நடுத்தர மக்கள் மிகப்பெரிய சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் அரசு கவுரவம் பார்க்காமல் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.”

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x