Published : 06 Jan 2018 12:30 PM
Last Updated : 06 Jan 2018 12:30 PM

உள்நோக்கத்துடன் பேசும் கமல்ஹாசனுக்கு பதில் சொல்ல முடியாது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

நடிகர் கமல் ஹாசன் பொத்தாம் பொதுவாக அதிமுகவை குறிவைத்து உள்நோக்கத்துடன் பேசுகிறார். அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

நீண்ட நாட்களுக்கு பின்னர் ட்விட்டரில் கருத்து தெரிவித்த நடிகர் கமல் ஹாசன் ஆர்.கே.நகரில் 6000 ரூபாய் கொடுக்கப்பட்டது, பணம் கொடுத்து விலைக்கு வாங்கப்பட்ட வெற்றி என்று வாக்காளர்களையும் விமர்சித்திருந்தார். இது அனைவராலும் கண்டிக்கப்பட்டது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயகுமார் கூறியதாவது:

அரசு எந்திரத்தில் தேவை இருக்கும், முழுமையாக நிறைவேற்றி தருவது அரசாங்கத்தின் கடமை, அந்த தேவைகளை நிதி நெருக்கடி இருந்தாலும் நிறைவேற்றி வருகிறோம். உதாரணத்திற்கு ஸ்கூட்டர் பொங்கல் அன்று நிறைவேற்றப்பட உள்ளது. திமுக ஆட்சியில் தொழிலாளர் நலன் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது. ஜெயலலிதா ஆட்சியில் தொழிலாளர் நலன் காக்கப்படுகிறது.

திமுக ஆட்சியில் தொழிலாளர் நலன் எப்படி இருந்தது என்பதற்கு உதாரணம் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட அடக்குமுறையே உதாரணம். அவர்கள் தங்கள் கூலிக்காக போராடியபோது அடக்குமுறையை ஏவி விட்டு, அன்று தாமிரபரணி ஆறே ரத்த ஆறாக மாறியது.

எனவே கமல்ஹாசன் அவருக்கு தெரிந்தது எல்லாம் பொத்தாம் பொதுவாக சொல்வது, குறிப்பாக அதிமுகவை குறிவைத்து சொல்வதை பார்க்கும் போது உள்நோக்கத்தோடு கருத்து சொல்வதாக தெரிகிறது. ஆகவே அதற்கு கருத்து சொல்ல விரும்பவில்லை.

இவ்வாறு ஜெயகுமார் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x