Published : 06 Jan 2018 10:06 AM
Last Updated : 06 Jan 2018 10:06 AM

இளைய தலைமுறையினரைக் கவர புது வடிவம் பெறும் திருக்குறள்

திருக்குறள் சிறந்த இலக்கியம் மட்டுமல்லாது, ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கைக்கும் வழிகாட்டியாகவும் உள்ளது. ஒவ்வொரு குறளும் மனித வாழ்க்கை முறையின் அங்கங்களான பக்தி, சாகச வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, ஈகை, அரசாட்சி, பாதுகாப்பு, நட்பு, காதல் உள்ளிட்டவற்றை எடுத்துரைக்கின்றன.

உலகப் பொதுமறையாகப் போற்றப்படும் திருக்குறளை அனைவருக்கும் கொண்டு போய்ச் சேர்க்கும் விதமாக தமிழ் வளர்ச்சித் துறை முன்னாள் செயலரும், டிஎன்பிஎஸ்சி உறுப்பினருமான மு.இராசாராம் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வரு கிறார்.

திருக்குறள் முற்றோதல் திட்டம்

இவர் தமிழ் வளர்ச்சித் துறை செயலராக இருந்தபோதுதான் சீன மற்றும் அரபு மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டது. இவர் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, ‘குளோரி ஆஃப் திருக்குறள்’ என்ற பெயரில் வெளியிட்டுள்ளார். இந்நூல் 15 பதிப்புகள் செய்யப்பட்டு விற்பனையாகியுள்ளன. இவர் தமிழ் வளர்ச்சித் துறை செயலராக இருந்தபோது 1330 திருக்குறளையும் ஒப்பிக்கும் குழந்தைகளுக்கு பரிசளிக்கும் திட்டமான திருக்குறள் முற்றோதல் திட்டத்துக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக திருக்குறளை இன்றைய தலைமுறையினருக்கு கொண்டுபோய் சேர்க்கும் விதமாக, திருக்குறளை மையமாகக் கொண்ட நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இசை மற்றும் பாரம்பரிய, கிராமிய நடனத்துடன் கூடிய நாடகத்தை உருவாக்கியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும், நாட்டு மக்கள் எப்படி இருக்க வேண்டும், நாட்டை ஆளும் ஆட்சியாளர் எப்படி இருக்க வேண்டும், அவருக்கு உதவி செய்யும் அமைச்சர்களும், ஒற்றர்களும் எப்படி இருக்க வேண்டும், வேளாண்மை, மருத்துவம், உணவு முறை எப்படி இருக்க வேண்டும் என்று அனைத்து அம்சங்களும் திருக்குறளில் கூறப்பட்டுள்ளன.

ஆயிரத்தில் ஒருவன்

இத்தகைய சிறப்புகளைக் கொண்ட திருக்குறளின் பெருமையை பறைசாற்றும் விதமாக, ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் திருக்குறளைப் பின்பற்றி எப்படி முன்னேற முடியும் என்பதை பிரதிபலிக்கும் விதமாக இந்த நாடகம் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு ‘ஆயிரத்தில் ஒருவன்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த நாடகத்துக்கான கருத்தாக்கத்தை நான் வழங்கி இருக்கிறேன். நாடகத்துக்கான ஆடற்கலை பயிற்சி மற்றும் இயக்கத்தை கே.ஆர். சுவர்ணலட்சுமி மேற்கொண்டுள்ளார். நாடகத்துக்கு முரளி சுப்பிர மணி இசையமைத்துள்ளார்.

இதில் காதல், மர்மம், நகைச்சுவை, நடனம் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. நாடகத்தில் அசல் குறள்கள், அதனைத் தொடர்ந்து அவற்றுக்கான விளக்கங்கள் ஆகியவை பொருத்தமான பாரம்பரிய மற்றும் கிராமப்புற இசையுடன் இணைந்து ஒலிக்கும். இந்த நாடகம் பாரம்பரிய மற்றும் கிராமப்புற நடனங்கள் கலந்த கலவையாகவும், இதுவரையில் மேடையில் கண்டிறாத அனுபவத்தைத் தருவதாகவும் இருக்கும்.

இந்த நாடகம் வரும் ஜனவரி 24-ம் தேதி சென்னை நாரத கான சபாவில் முதல்முறையாக அரங்கேற்றம் செய்யப்பட இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x