Published : 06 Jan 2018 10:02 AM
Last Updated : 06 Jan 2018 10:02 AM

மின்சார ரயில்களில் கூட்டம் அலைமோதியது

போக்குவரத்து தொழிலாளர்களின் காலவரையற்ற போராட்டம் தீவிரமடைந்ததால் தமிழகம் முழுவதும் நேற்று 40 சதவீதத்துக்கும் குறைவான பேருந்துகளே இயக்கப்பட்டன.

அதேநேரம் தாம்பரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி களுக்கு தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டன. பள்ளி கல்லூரி, வேன்களும் பேருந்துகளுக்கு பதிலாக இயக்கப்பட்டன. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 2 நாள் விடுமுறை என்பதால் இன்றுமுதல் கூடுதலாக பள்ளி, கல்லூரி பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பேருந்து போக்குவரத்து போதிய அளவில் இல்லாததால், பெரும்பாலான மக்கள் மின்சார ரயில்களில் பயணம் செய்தனர். இதன் காரணமாக சென்னை கடற்கரை, எழும்பூர், சென்ட்ரல், நுங்கம்பாக்கம், கிண்டி, மாம் பலம், தாம்பரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் வாங்கி மின்சார ரயில்களில் பயணம் செய்தனர். பயணிகளின் வசதிக்காக சில இடங்களில் கூடுதல் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன. பறக்கும் ரயில்களிலும், மெட்ரோ ரயில்களிலும் வழக்கத்தை விட அதிகமான மக்கள் பயணம் செய்தனர்.

35 சதவீதம் அதிகரிப்பு

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, “போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் மின்சார ரயில்களில் பயணிகளின் கூட்டம் சுமார் 35 சதவீதம் அதிகரித்துள்ளது. தேவை அதிகரிக்கும்போது, வெளியூருக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்களை இயக்கவும் தயாராக உள்ளோம்’’ என்றனர்.

இதுதொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் கூறும்போது, “கடந்த 2 நாட்களாகவே மெட்ரோ ரயில்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வழக்கமாக நாளொன்றுக்கு 24 ஆயிரம் பேர் மெட்ரோ ரயிலைப் பயன்படுத்துவார்கள். தற்போது பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட 30 சதவீதம் அதிகரித்துள்ளது’’ என்றார்.

பொதுமக்கள் கருத்து

இதுதொடர்பாக பொதுமக்கள் சிலர் கூறும்போது, “தமிழ்நாட்டில் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தால் திடீரென அரசு பேருந்துகளை நிறுத்துவதும், அதனால் பொதுமக்கள் அவதிப்படுவதும் வாடிக்கை யாகி விட்டது.

தமிழக அரசு தொழிலாளர்களின் பிரச்சினையை கையாளுவதிலும் மெத்தனமாக இருக் கிறது. இதுபோன்ற போராட்டங்களின்போது, ரயில் சேவைதான் கைகொடுக்கிறது.

இயற்கை பேரிடர் காலங்களில் மட்டும்தான் ரயில் சேவை பாதிக்கிறது. எனவே, பேருந்து தவிர, மற்ற போக்குவரத்து வசதி யும் தேவை என்பதை இதுபோன்ற போராட்டங்களால் உணர முடிகிறது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x