Published : 06 Jan 2018 10:01 AM
Last Updated : 06 Jan 2018 10:01 AM

அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு தற்காலிக தொழிலாளர்கள் நியமன பணி தீவிரம்

போக்குவரத்துத் தொழிலாளர்களின் புதிய ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், நேற்று முன்தினம் மாலை முதல் திடீரென வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, ஆளும் கட்சியின் தொழிற்சங்கங்கள் துணையோடு அரசுப் பேருந்துகளை இயக்குவதற்கான பணியில் நிர்வாகம் ஆர்வம் காட்டி வருகிறது.

இதற்கிடையே, அரசு போக்குவரத்துக் கழகங்களில் தற்காலிகமாக தினக்கூலி அடிப்படையில் ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு தொழிலாளர்களை நியமிக்க தமிழகம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட பணிமனைகளில் இதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: போக்குவரத்துக் கழகத்தைச் சார்ந்த சில தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் பேராட்டத்தினால் பொதுமக்களின் நலன் கருதி மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளை இயக்குவதற்கு தற்காலிக ஓட்டுநர் மற்றும் தற்காலிக நடத்துநர் பணியில் சேர தகுதியுள்ள கனகர ஓட்டுநர் உரிமம் மற்றும் நடத்துநர் உரிமம் வைத்துள்ளவர்கள் சான்றிதழ் களுடன் அருகில் உள்ள மாநகரப் போக்குவரத்துக் கழக பணிமனை கிளை மேலாளர்களை உடனடியாக அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பயணிகளின் உயிருக்கு ஆபத்து

இதுதொடர்பாக சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தர்ராஜன் கூறும்போது, ‘‘போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கையை இந்த அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, வேலைநிறுத்தத்தை முறியடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. தற்காலிக ஊழியர்களைக் கொண்டு பேருந்துகளை இயக்குவது விதிமீறல்.

இது பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். மொத்தம் 10 சதவீதப் பேருந்துகள்கூட தற்போது இயக்கப்படவில்லை. எனவே, 2.57 சதவீத ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கை கள் குறித்து அரசு பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும். இந்த விவகாரத்தில் முதல்வர் பழனிசாமி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு முன்வராத வரை எங்கள் போராட்டம் தொடரும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x