Published : 06 Jan 2018 10:08 AM
Last Updated : 06 Jan 2018 10:08 AM

அரசுப் பேருந்துகளின் சேவை முடங்கியதால் ஆம்னி பேருந்து, ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம்: பொதுமக்கள் அவதி

அரசு பேருந்துகளின் சேவை முடங்கியதால், கோயம்பேட்டில் இருந்து வெளியூருக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளில் 30 சதவீதம் வரையில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டது.

கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் அரசு போக்குவரத்துக் கழகங்களில் இருந்து 2,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் தினமும் இயக்கப்படுகின்றன. போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக நேற்று முன்தினம் மாலை முதலே அரசுப் பேருந்துகளின் சேவை படிப்படியாக குறைக்கப்பட்டது.

வெறிச்சோடிய கோயம்பேடு

பேருந்து நிலையத்தின் நடைமேடைகளிலும், பணிமனைகளிலும் பேருந்துகள் வரிசையாக நிறுத்தப்பட்டு இருந்தன. வேலைநிறுத்த அறிவிப்பு நேற்று முன்தினமே வெளியானதால், வெளியூர் செல்வதை பொதுமக்கள் தவிர்த்தனர். இருப்பினும், ஒரு சில பயணிகள் வந்து, ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். இதனால், கோயம்பேடு பேருந்து நிலையம் வெறிச்சோடிக் காணப்பட்டது.

கட்டாயமாக ஊருக்குச் செல்ல திட்டமிட்டிருந்தவர்கள், ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் கொடுத்து பயணம் செய்தனர். மக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு 25 முதல் 30 சதவீதம் வரையில் கட்டணத்தை உயர்த்தி, கூடுதலாக ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டன.

பல மணி நேரம் காத்திருப்பு

சென்னையில் தனியார் பேருந்து வசதி இல்லை என்பதால், அரசு பேருந்துகளுக்காக பல மணி நேரமாகக் காத்திருந்த மக்கள் ரூ.100 முதல் ரூ.400 வரை கட்டணம் கொடுத்து ஆட்டோக்கள் மூலம் பயணம் செய்தனர். ஒரு சிலர் மட்டும் வழக்கமான கட்டணத்தை வசூலித்து ஓட்டினாலும், பெரும்பாலான ஆட்டோ ஓட்டுநர்கள் பேரம் பேசியே கட்டணத்தை வசூலித்தனர். ஆனால், தமிழக அரசு 1.8 கிலோமீட்டருக்கு ரூ.25 என்றும், அடுத்தடுத்துச் செல்லும் கிலோமீட்டருக்கு ரூ.12 என நிர்ணயிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக பொதுமக்கள் சிலர் கூறும்போது, ‘‘கனமழை, பஸ் ஊழியர்கள் போராட்டம் என்றால் திடீரென பஸ்களை நிறுத்தி விடுகின்றனர். போதிய பஸ் வசதி கிடைக்காமல் மக்கள் நடுரோட்டிலேயே நிற்கும் நிலை ஏற்படுகிறது. ஆட்டோவில் குறைந்தபட்சமாக ரூ.150 முதல் ரூ.200 என கட்டணம் கேட்கிறார்கள்.

அரசு நிர்ணயித்த ஆட்டோ கட்டணம் என்ன ஆனது என்றே தெரியவில்லை. ஆட்டோ மட்டுமல்ல, ஷேர்ஆட்டோவைப் போல் இயக்கப்படும் இதர தனியார் வாகனங்களில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டன’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x