Published : 06 Jan 2018 09:59 AM
Last Updated : 06 Jan 2018 09:59 AM

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

பொதுமக்கள் நலன் கருதி போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் தமிழக அரசு உடனடி பேச்சுவார்த்தை நடத்தி தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு அர சியல் கட்சித் தலைவர் வலியுறுத் தியுள்ளனர்.

இதுதொடர்பாக நேற்று அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:

திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின்: போக்குவரத்து தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.19,500 வழங்க வேண்டும், தொழிலாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்த ரூ.7,000 கோடியை திரும்ப வழங்க வேண்டும், ஓய்வூதிய பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில், தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சருடன் பல்வேறு தொழிற்சங்க பிரதிநிதிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத் தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனால், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளர். எனவே, முதல்வர் பழனிசாமி தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் உடனடி பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண வேண்டும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்: போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு தமிழக அரசே முழு காரணம். நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகையை கொடுக்காமல் அரசு இழுத்தடிக்கிறது. இனியும் காலதாமதம் செய்யாமல் அவர்களின் கோரிக்கையை தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்:போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர். மக்களின் நலன் கருதி தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் தமிழக அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண வேண்டும்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: போக்குவரத்து தொழிலாளர்களின் திடீர் வேலைநிறுத்தத்துக்கு தமிழக அரசின் அலட்சியப்போக்கே காரணம். பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய ரூ.6,460 கோடியில் வெறும் ரூ.1,500 கோடி மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. பொதுமக்களின் நலன் கருதி தொழிலாளர்களின் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண வேண்டும்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும். போக்குவரத்து கழகங்களில் நிலவும் நிர்வாக சீர்கேடுகளும் முறைகேடுகளும்தான் போக்குவரத்துத் துறையின் நஷ்டத்துக்கு காரணம். எனவே, நஷ்டத்தை காரணமாக கூறி தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இழுத்தடிப்பது ஏற்புடையதல்ல. தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண வேண்டும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தமிழக அரசின் செயலற்ற தன்மையே காரணம். தற்போதையச் சூழலில் மக்களின் நலன் கருதி தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற ஆக்கபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார்: அரசு போக்குவரத்து கழகங்களின் வருவாய் உயரவும், நஷ்டமின்றி இயங்கவும் தனியார் பங்களிப்புடன் பேருந்து சேவையை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு முன்னதாக பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

மமக தலைவர் ஜவாஹிருல்லா: பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடிகர்களின் ட்விட்டர் பதிவுகள்

நடிகர் கமல்: தமிழக முதல்வர், மக்கள் அனுபவிக்கும் இன்னல்களையும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளையும் மனதில் கொண்டு, தயவாய் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். பொங்கலுக்கு அதுவே அரசு தரும் விலைமதிப்பிலா பரிசாகும்.

நடிகர் விஷால்: இந்த வேலை நிறுத்தத்தால் பாமர மக்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். பண்டிகை காலம் நெருங்கும் நேரத்தில் மக்களின் அவதி இன்னும் அதிகம் ஆகுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அரசு உடனே பேச்சுவார்த்தை நடத்தி போக்குவரத்துத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று வேலை நிறுத்தத்தை கைவிட செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x