Published : 06 Jan 2018 09:54 AM
Last Updated : 06 Jan 2018 09:54 AM

சென்னை மாநகராட்சி சார்பில் நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வு பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு நீட் மற்றும் ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்வதற்கான பயிற்சி வகுப்புகளை ஆணையர் தா.கார்த்திகேயன் தொடங்கிவைத்தார்.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

அறிவுத்திறன் அதிகரிப்பு

சென்னை மாநகராட்சி பராமரிப்பில் அண்ணாநகர் சுப்பராயன் தெருவில் உள்ள மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆண்களுக்கான உண்டு, உறைவிடப் பள்ளியும், சைதாப்பேட்டையில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெண்களுக்கான உண்டு உறைவிடப் பள்ளியும் கடந்த இரு ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. மாநகராட்சியின் ஒருங்கிணைந்த ஸ்பார்க் திட்டத்தின்கீழ், மாநகராட்சிப் பள்ளிகளில் இருந்து 25 மாணவர்கள் மற்றும் 45 மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பள்ளிப் பாடங்களில் இருந்து அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அதன்மூலம் அவர்களின் அறிவுத்திறன் அதிகரித்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு, பொறியியல் மற்றும் மருத்துவம் படிப் பதற்கான நுழைவுத் தேர்வுகளான ஜேஇஇ, நீட் ஆகிய தேர்வுகளை எதிர்கொள்ளும் விதமாக திறனாய்வுத் தேர்வின் மூலம் மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் 60 மாணவர்கள், 60 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் தலா 40 மாணவ, மாணவிகளுக்கு ஆங்கிலம் மற்றும் தமிழில் நீட் தேர்வு பயிற்சி வகுப்பும், தலா 20 மாணவ, மாணவி களுக்கு ஆங்கிலத்தில் மட்டும் ஜேஇஇ தேர்வுக்கான பயிற்சி வகுப்பும் நேற்று தொடங்கியது. சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் பயிற்சி வகுப்புகளைத் தொடங்கிவைத்தார்.

காலை 5 மணி - இரவு 10 மணி

இப்பயிற்சி காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை வழங்கப்பட உள்ளது. விடுமுறை நாட்களில் பிரபல நுழைவுத் தேர்வு பயிற்சி நிறுவனங்கள் மூலம் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. மேலும், இரு உண்டு உறைவிடப் பள்ளிகளிலும் நவீன வசதி களுடன் கூடிய 120 படுக்கைகளைக் கொண்ட அறைகளை மாநகராட்சி ஆணையர் த.கார்த்திகேயன் திறந்துவைத்தார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை ஆணையர் (கல்வி) மகேஸ்வரி ரவிக்குமார், மத்திய வட்டார துணை ஆணையர் சுபோத்குமார், தெற்கு வட்டார துணை ஆணையர் எஸ்.கோபாலசுந்தர ராஜ், மாநகராட்சி கல்வி அலுவலர் டி.ரஞ்சனி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x