Last Updated : 06 Jan, 2018 09:42 AM

 

Published : 06 Jan 2018 09:42 AM
Last Updated : 06 Jan 2018 09:42 AM

எதிர்காலம் குறித்து நம்பிக்கையூட்டவே அதிமுக நிர்வாகிகளுக்கு பயிற்சி: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

எதிர்காலம் குறித்து நம்பிக்கையூட்டவே அதிமுக நிர்வாகிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடத்துவதாக ஜெயலலிதா பேரவைச் செயலாளரும், வருவாய்த் துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தெரிவித் துள்ளார்.

சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலாளர்களுக்கு 2 நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. இது தொடர்பாக ‘தி இந்து’வுக்கு அமைச்சர் உதயகுமார் அளித்த சிறப்புப் பேட்டி:

திடீரென எதற்காக 2 நாள் பயிற்சி முகாம் நடத்துகிறீர்கள்?

இது திடீரென நடக்கும் பயிற்சி முகாம் அல்ல. பேரவை செயலாளராக நான் பொறுப்பேற்ற பிறகு ஜெயலலிதாவின் அனுமதியுடன் மாவட்டச் செயலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமைத் தொடங்கினோம். இப்போது 5-வது ஆண்டாக இந்த பயிற்சி முகாம் நடக்கிறது.

கட்சியில் நீண்ட காலமாக பொறுப்பில் இருப்பவர்களுக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி அவசியமா?

பயிற்சி என்பது எல்லோருக்குமே அவசியமானது. பல காரணங்களால் அரசியலுக்கு வருபவர்கள், தங்களது திறனை மேம்படுத்திக் கொள்ளாவிட்டால் அரசியலில் நீடிக்க முடியாது. சாதிக்கவும் முடியாது. எனவேதான் ஆண்டுதோறும் 2 நாட்கள் பயிற்சி முகாம் நடத்துகிறோம்.

பயிற்சி முகாமில் என்னென்ன கற்றுக் கொடுக்கிறீர்கள்?

அமைச்சராக உள்ள நான் உட்பட பதவியில் உள்ளவர்கள் அனைவருமே சாதாரண குடும்பங்களில் இருந்து வந்தவர்கள். எங்களைப் போன்றவர்களின் அனுபவங்களை எடுத்துக் கூறுகிறோம். அதிலிருந்து புதியவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். பயிற்சி முகாமை முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தொடங்கி வைத்தனர். அவர்களது அறிவுரையும். செங்கோட்டையன் போன்ற மூத்த அமைச்சர்களின் ஆலோசனைகளும் பயிற்சி முகாமில் நிர்வாகிகளுக்கு கிடைத்தன. இது பேரவை மாவட்டச் செயலாளர்களின் ஆளுமைத் திறமையை மேம்படுத்தும்.

ஆளும் கட்சி நிர்வாகிகள் என்றாலே ஒருவித எதிர்பார்ப்புடன்தானே வருவார்கள்?

அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தால்தான் எல்லாத் துறைகளிலும் சாதிக்க முடியும். அரசியலில் இந்த எதிர்பார்ப்பு மிகவும் அவசியம். முதல்வர் உட்பட அமைச்சர்களை சந்தித்து கேள்வி கேட்கக் கூடிய அதிகாரம் ஒவ்வொரு அதிமுக தொண்டனுக்கும் உண்டும். ஒவ்வொரு நிர்வாகியும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை பார்க்க வேண்டும், கற்றுக் கொள்ள வேண்டும்.

பயிற்சி முகாமுக்கு நிர்வாகிகள் ஆர்வத்துடன் வருகிறார்களா?

நிர்வாகிகளின் ஆர்வம்தான் 5-வது ஆண்டாக பயிற்சி முகாம் நடக்க காரணம். அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் மட்டுமல்லாது பேராசிரியர்கள், திறன் மேம்பாட்டு வல்லுநர்களும் இந்த 2 நாள் பயிற்சி முகாமில் பயிற்சி அளிக்கிறார்கள். கட்சியில் தனக்கு எதிர்காலம் உள்ளது என்ற நம்பிக்கையை ஒவ்வொரு நிர்வாகிக்கும் ஏற்படுத்தவே இதுபோன்ற பயிற்சி முகாமை நடத்துகிறோம். இன்றைய காலகட்டத்தில் இது மிகவும் அவசியமானது. உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவீத வெற்றியை பெற உழைக்க நிர்வாகிகளை தயார்படுத்த வேண்டும். அதற்கும் இதுபோன்ற பயிற்சி முகாம்கள் கைகொடுக்கும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x