Published : 06 Jan 2018 09:22 AM
Last Updated : 06 Jan 2018 09:22 AM

போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக அரசுப் பேருந்தை இயக்கிய அந்தியூர் அதிமுக எம்எல்ஏ

அந்தியூரில் இருந்து பவானி வரை அரசுப் பேருந்தை பயணிகளுடன் இயக்கிய, அந்தியூர் அதிமுக எம்எல்ஏ கே.ஆர்.ராஜாகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக, ஈரோடு மாவட்டம் அந்தியூரில் குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகளே இயக்கப்பட்டன. இதனால், பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் அந்தியூர் போக்குவரத்துக் கழக பணிமனைக்கு நேற்று மதியம் சென்ற அந்தியூர் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக எம்எல்ஏ கே.ஆர்.ராஜாகிருஷ்ணன், மேலாளரைச் சந்தித்து பேருந்துகள் இயக்கம் குறித்து கேட்டறிந்தார். ஓட்டுநர்கள் வருகை குறைவாக உள்ளதாக மேலாளர் தெரிவித்தார்.

தன்னிடம் கனரக வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் உள்ளதை மேலாளரிடம் காட்டிய எம்எல்ஏ, பயணிகள் நலனுக்காக தன்னை அரசு பேருந்தை இயக்க அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தார். அவரது ஓட்டுநர் உரிமத்தை சரிபார்த்த மேலாளர், அரசுப் பேருந்தை இயக்க அனுமதி அளித்தார்.

ஓட்டுநருக்கான சீருடையான காக்கி கால்சட்டை அணிந்த எம்எல்ஏ, அந்தியூர் பேருந்து நிலையத்தில் இருந்து பவானி செல்லும் அரசுப் பேருந்தை இயக்கினார். 35 பயணிகளுடன் 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பவானி வரை பேருந்து இயக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பவானியில் இருந்து அந்தியூர் வரை எம்எல்ஏ ராஜாகிருஷ்ணன் பேருந்தை இயக்கினார்.

அந்தியூர் பேருந்து நிலையத்துக்கு பேருந்து வந்தபோது, திமுக மற்றும் போக்குவரத்து தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் பேருந்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் அவர்களை அப்புறப்படுத்தினர். எம்எல்ஏ ராஜாகிருஷ்ணன் மினி பேருந்துகளுக்கு உரிமம் பெற்று இயக்கிய அனுபவம் உள்ளதால், அரசுப் பேருந்தை இயக்க அவர் களமிறங்கியதாக அதிமுகவினர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x