Published : 10 Dec 2017 07:29 PM
Last Updated : 10 Dec 2017 07:29 PM

இலவச அரிசி திட்டத்தை நான் தடுக்கவில்லை: ஆளுநர் கிரண்பேடி மீண்டும் விளக்கம்

தானம்பாளையம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆளுநர் கிரண்பேடி ஆய்வு மேற்கொண்டார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொள்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

தவளக்குப்பம் அடுத்த தானம்பாளையம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்வர் நாராயணசாமி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்தார். அதை ஆளுநர் கிரண்பேடி நேற்று ஆய்வு செய்தார்.

சுத்திகரிப்பு நிலையத்தின் கழிவுநீரை முறையான வகையில் பயன்படுத்தாமல் வீணடிக்கப்பட்டு வருவதாக கூறிய ஆளுநர், வீணாகும் நீரை மறுசுழற்சிக்கு பயன்படுத்த வேண்டும் அல்லது அங்கு பூங்கா அமைத்து செடிகளுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு ஆளுநர் உத்தரவிட்டார்.

அப்போது அங்கு வந்த அப்பகுதி மக்கள் ஆளுநர் கிரண்பேடியிடம், “எங்கள் பகுதியில் வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படும் குடிநீர் மஞ்சள் நிறத்தில் மாசு கலந்து வருகிறது’’ என்று புகார் தெரிவித்தனர். புட்டிகளில் பிடித்து வைத்திருந்த தண்ணீரையும் அவர்கள் ஆளுநரிடம் காட்டினர்.

ரேஷன் கடைகளில் இலவச அரிசி சரியாக வழங்கப்படுவதில்லை. சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் முறையிட்டு புகார் கூறினர்.

திட்டமிட்டே பரப்பப்படும் பொய்யான தகவல்

அதற்கு விளக்கமளித்த ஆளுநர் கிரண்பேடி,”இலவச அரிசிக்கான திட்டத்தை நான் தடுக்கவில்லை; எனக்கு தமிழ் மொழி தெரியாததால் என்னால் இதை விளக்கி மக்களுக்கு தெரிவிக்க முடியவில்லை. என் மீது பொய்யான குற்றச்சாட்டை பரப்பி வருகின்றனர். நான் எந்த கோப்புகளையும் தடுத்து நிறுத்தவில்லை. உங்களுக்கு சந்தேகம் இருந்தால், தகவல் பெறும் உரிமை சட்டத்திலும், ஆளுநர் மாளிகையில் தொடர்பு கொண்டு இதுபற்றி விளக்கம் பெறாலம்’’ என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் கிரண்பேடி, ‘‘திட்டமிட்டே என் மீது பொய்யான தகவல் பரப்புவதால், மக்கள் எங்களிடம் கோரிக்கை வைக்கிறார்கள், அது உண்மைக்கு புறம்பானது.

மக்களுக்கு சேவை செய்யவே ராஜ் நிவாஸ் உள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நிர்வாகத்தை சீர்செய்வதிலேயே கடந்து விட்டது.

மாதம் ஆயிரம் புகார்கள் என வருடத்திற்கு 12 ஆயிரம் புகார்கள் வந்துள்ளன. சிறியது, பெரியது என பார்க்காமல் ராஜ்நிவாஸ் செயல்படுகிறது.

மருத்துவக் கல்லூரி முறை கேடுகளில் சிபிஐ விசாரணை சரியாக செல்கிறது. வரும் ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை சரியாக நடைபெறும்’’ என்று தெரிவித்தார். தொடர்ந்து, தவளக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆளுநர் கிரண்பேடி, மருத்துவர், மருத்துவ பணியாளர்களிடம் சிறப்பாக பணி செய்ய வலியுறுத்தினார். பொது மக்களுக்கான விடுமுறை நாட்களில் மருத்துவர்களும், மருத்துவ பணியாளர்களும் பணியாற்ற முன்வர வேண்டும். இதற்காக, மருத்துவர்களும், பணியாளர்களும் சுழற்சி முறையில் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்றும் அப்போது ஆளுநர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x