Published : 10 Dec 2017 07:27 PM
Last Updated : 10 Dec 2017 07:27 PM

அரசு மருத்துவக் கல்லூரியில் சிபிஐ சோதனை நடத்தியது ஏன்? - முதல்வர் நாராயணசாமி விளக்கம்

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சோனியாகாந்தி பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் ரங்கசாமி கொல்லைப்புற வழியாக கூட்டுறவு சங்கம் மூலம் விதிமீறி 770 பேரை பணியில் அமர்த்தினார். அவர்களை அரசு ஊழியர்களாக மாற்றக்கோரி கோப்பு தயாரித்து, ஆளுநருக்கு அனுப்பினார். அப்போதைய ஆளுநர் அதற்கு அனுமதி மறுத்தார். இதனால் அவர்களை நிரந்தரமாக்க முடியவில்லை.

இதுகுறித்து சிபிஐக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து சிபிஐ நேற்று கதிர்காமம் மருத்துவக் கல்லூரியில் சோதனை நடத்தியது. ஆனால் உண்மைக்கு புறம்பாக மாணவர்கள் சேர்க்கையில் முறைகேடு நடைபெற்றதாகவும், அதில் விசாரணை நடத்த சிபிஐ வந்திருப்பதாகவும் கூறப்பட்டது. மாணவர் சேர்க்கையில் எந்த விதிமீறலும் நடைபெறவில்லை. இதற்காக சிபிஐ விசாரணையும் நடத்தவில்லை.

கடந்த ஆட்சியில் கொல்லைப்புறமாக அரசு நிறுவனங்களில் பணிக்கு அமர்த்தி, அவைகளை நட்டம் ஏற்பட செய்தது குறித்து விசாரிக்க முன்னாள் தலைமை செயலர் விஜயன் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு அறிக்கை தாக்கல் செய்த பின்னர் அரசு முடிவு எடுக்கும்.

ஒக்கி புயலால் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. ஒக்கி புயலின்போது லட்சத்தீவில் கரை ஒதுங்கிய 5 மீனவர்கள் பத்திரமாக உள்ளனர். அதுபோல் ஒக்கி புயல் தாக்கிவிடப்போகிறது என்பதற்காக குஜராத்தில் ஒதுங்கிய நமது மீனவர்களை மீட்க அம்மாநில அரசும், புதுச்சேரி அரசும் நடவடிக்கை எடுத்துள்ளது. அவர்கள் புதுச்சேரி திரும்பி வருகின்றனர்.

ஆளுநருக்கு புகார் வந்தால் அதை அமைச்சருக்கு அனுப்ப வேண்டும். அமைச்சர் துறை செயலருக்கு அனுப்புவார். துறை செயலர் விசாரித்து அமைச்சருக்கு அறிக்கை தருவார். அதன்மீது அமைச்சர் நடவடிக்கை எடுப்பார். இது அமைச்சரின் அன்றாட நிர்வாகப்பணி.

ஆளுநர் தனக்கு வரும் புகாரின் மீது ஆய்வு செய்ய அதிகாரம் இல்லை. அமைச்சரின் அன்றாட பணியில் தலையிடவும் ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x