Published : 10 Dec 2017 04:24 PM
Last Updated : 10 Dec 2017 04:24 PM

மதுரை வைகை ஆற்றில் மூழ்கிய மாணவரை 3 நாள் ஆகியும் மீட்க முடியாமல் திணறல்

மதுரை வைகை ஆற்றில் குளிக்கும்போது அடித்துச் செல்லப்பட்ட பள்ளி மாணவரை தீயணைப்பு வீரர்கள் மூன்றாம் நாளாக நேற்றும் தேடினர்.

வடகிழக்கு பருவமழையால் வைகை அணையில் நீர்மட்டம் உயர்ந்தது. இதையடுத்து பாசன மற்றும் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளுக்குப் பின் வைகையில் தண்ணீர் ஓடுவதைப் பார்த்த இளைஞர்கள், சிறுவர்கள் செல்பி எடுத்தும், ஆற்றில் இறங்கி குளித்தும் வருகின்றனர்.

மதுரை ஆழ்வார்புரம் அருகே வைகை ஆற்றில் கடந்த வியாழக்கிழமை செல்பி எடுத்துக்கொண்டிருந்த பழநியைச் சேர்ந்த ஜெயசூரியா(15) என்ற பள்ளி மாணவர், தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். அவரை, கடந்த வியாழக்கிழமை முதல் தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர். 3 நாட்களாக தேடியும் சிறுவனை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து தானியங்கி பறக்கும் கேமரா மூலம் சிறுவனை தேடும் முயற்சி நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோன்று சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் நேற்று முன்தினம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட புதுப்பட்டியை சேர்ந்த கட்டிடத் தொழிலாளிகள் பிரபு (30), சுரேஷ் (30) ஆகியோரையும் தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x