Published : 10 Dec 2017 01:58 PM
Last Updated : 10 Dec 2017 01:58 PM

சத்தி அருகே பள்ளி மாணவியை கிண்டல் செய்ததால் தகராறு: இரு தரப்பினரிடையே மோதல் அபாயம்; கடைகள் அடைப்பு; 3 மாவட்ட போலீஸ் குவிப்பு

தாளவாடியில் பள்ளி மாணவியை கேலி, கிண்டல் செய்தது தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டதையடுத்து, அசம்பாவிதம் தவிர்க்க கடைகள் அடைக்கப்பட்டன. பள்ளி களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும், 3 மாவட்ட காவல் துறையினர் அப்பகுதியில்ப பாதுகாப்பு பணியில் ஈடு படுத்தப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தாளவாடி மலையில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. பள்ளியில் பயிலும் மாணவி ஒருவரை, தொட்டகாஜனூரைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் கிண்டல் செய்ததாகக் கூறப்படு கிறது. தகவலறிந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்குச் சென்று அந்த மாணவர்களை கண்டித்ததுடன் மிரட்டியுள்ளனர்.

இதன்காரணமாக இருதரப்பினருக்கிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இதனிடையே இரு தரப்பைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் தாளவாடி பேருந்து நிலையத்தில் வேல், கம்புகளுடன் திரண்டனர். இதனால், அப்பகுதி முழுவதும் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள கடைகள் அடைக்கப்பட்டன. பேருந்து நிலையத்திற்குள் வரும் பேருந்துகளும் ஆங்காங்கு நிறுத்தப்பட்டன.

அசம்பாவிதம் தவிர்க்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார் உத்தரவின்பேரில் தாளவாடியில் 100-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.

பதற்றம் நிலவியதையடுத்து தாளவாடியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு உள்ளுர் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால், தலமலை சாலை, தொட்டகாஜனூர் சாலை, சத்தியமங்கலம் சாலை, மைசூர் சாலை ஆகிய இடங்களில் போக்கு வரத்து குறைந்து சாலை வெறிச்சோடி காணப்பட்டது.

இதனிடையே நேற்று காலை முதல் பேருந்துகள் இயக்கப்பட்டபோதும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர தயங்கியதால் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. அசம்பாவிதம் தவிர்க்க ஈரோடு போலீஸாருடன் கோவை, திருப்பூரில் இருந்தும் காவல் துறையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே இருதரப்பிலும் 30 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்புடும் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x