Published : 10 Dec 2017 01:50 PM
Last Updated : 10 Dec 2017 01:50 PM

அரசு ஐடிஐ வளாகத்தில் மரங்கள் வெட்டிக் கடத்த முயற்சி? தன்னார்வலர்கள் தடுத்ததால் அதிகாரிகள் விசாரணை

கோவை அரசு ஐடிஐ வளாகத்தில் 50 ஆண்டுகள் பழமையான மரங்களை அனுமதியின்றி வெட்டிக் கடத்த முயன்றதை தன்னார்வலர்கள் தடுத்து நிறுத்தினர். இது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் துடியலூர் அருகே அரசு தொழிற்பயிற்சி நிலையம் (ஐடிஐ) உள்ளது. ஏராளமான மாணவர்கள் இங்கு படிப்பதால், வளாகமும் அதிக பரப்புடன் உள்ளது. அதில் பல வகையான மரங்கள் உள்ளன. இந்நிலையில், நேற்று காலை ஐடிஐ வளாகத்தில் இருந்த மரங்களை சிலர் வெட்டிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த மக்கள் கொடுத்த தகவலின்பேரில் ஓசை அமைப்பைச் சேர்ந்த ஞானகுரு என்பவர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தார். ஆனால், அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்றுவிட்டுத்தான் மரங்கள் வெட்டப்படுகின்றன எனக் கூறியுள்ளனர்.

இதையடுத்து சூழல் ஆர்வலர்கள், வடக்கு வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மரங்கள் வெட்டப்படுவது குறித்து தகவல் தெரிவித்தனர். அப்போதுதான் அனுமதி பெறாமலேயே மரங்கள் வெட்டப்பட்டது தெரியவந்தது.

இது குறித்து சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது: 50 ஆண்டுகள் பழமையான இரண்டு வாகை மரங்களை எந்த அனுமதியும் பெறாமல் வெட்டியுள்ளனர். நல்ல வேளையாக கிளைகள் வெட்டியதோடு நிறுத்தப்பட்டது. அனுமதி ஏதும் பெறவில்லை என்பதை அதிகாரிகள் நேரில் வந்து உறுதி செய்தனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளனர். அரசு வளாகத்திலேயே மரங்களைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. மாறாக, மரங்கள் வெட்டப்படுகின்றன என்பது வருத்தமாக உள்ளது. மக்களைவிட அரசுத் துறையினருக்கு இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x