Published : 10 Dec 2017 01:04 PM
Last Updated : 10 Dec 2017 01:04 PM

ஆசிரியர் கண்டிப்பால் விபரீத முடிவு சேலத்தில் மாடியில் இருந்து குதித்த மாணவி பலி; மற்றொரு மாணவி படுகாயம்

சேலம்சேலத்தில் பள்ளி மாணவிகள் இருவர் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில், ஒரு மாணவி பலியானார். மற்றொரு மாணவி படுகாயம் அடைந்தார்.

சேலம் செவ்வாய்பேட்டை மூலப்பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மனைவி ஜெயமேரி. இவர்களது மகள் ஜெயராணி. ஜெயராணியும் இவர், அரிசிபாளையத்தில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இவரும், இவரது நெருங்கிய பள்ளித் தோழி ஒருவரும் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை. இதுகுறித்து இருவரின் பெற்றோர், சேலம் பள்ளப்பட்டி போலீஸில் புகார் செய்தனர்.

இந்நிலையில், நேற்று காலை சேலம் ராஜகணபதி கோயில் அருகேயுள்ள தேர் வீதியில் உள்ள தங்கும் விடுதியின் 3-வது மாடியில் இருந்து, 2 பள்ளி மாணவிகள் கீழே குதித்தனர். இதில், ஒரு மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயம் அடைந்த மற்றொரு மாணவியை, போலீஸார் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு இடுப்பு எலும்பு முறிந்திருப்பது தெரியவந்தது.

சம்பவ இடத்துக்கு வந்து மாநகர காவல் துணை ஆணையர் சுப்புலட்சுமியும், டவுன் போலீஸாரும் விசாரணை நடத்தினர். அதில், உயிரிழந்தது ஜெயராணி என்பதும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது அவரது தோழி என்பதும் தெரியவந்தது.

விசாரணையில், ‘நெருங்கிய தோழிகளான இருவரும் வகுப்பறையில் ஒன்றாக அமர்ந்து, ஆசிரியர் பாடம் நடத்தும்போது பேசிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களை ஆசிரியர் கண்டித்தாராம். இருவரையும் வெவ்வேறு இடங்களில் மாற்றி அமர வைத்த ஆசிரியர், பெற்றோரை பள்ளிக்கு அழைத்து வரும்படி தெரிவித்துள்ளார்.

இதனால், மாணவிகள் வகுப்பறையில் பைகளை வைத்துவிட்டு, இரவு வீடு திரும்பாமல், நேற்று காலை தேர்வீதியில் உள்ள தங்கும் விடுதியின் 3-வது தளத்தில் உள்ள மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்தது தெரியவந்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மாணவியிடம் சேலம் முதலாவது குற்றவியல் நீதிமன்ற நடுவர் கலைவாணி விசாரணை நடத்தினார். மாணவிகளின் இந்த முடிவுக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி கூறும்போது, ‘‘இரு மாணவிகளும் இணைபிரியாத தோழிகளாக இருந்தனர். இவர்களின் நடவடிக்கை குறித்து ஆசிரியர்கள் அறிவுரை வழங்கியதோடு, பெற்றோரிடம் தெரிவிக்க உள்ளதாக கூறியதால், இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x