Published : 10 Dec 2017 01:01 PM
Last Updated : 10 Dec 2017 01:01 PM

பொருளாதாரம், சுகாதாரத்தில் 20 ஆண்டுகள் பின்னடைவு: உதவிக் கரமின்றி தவிக்கும் இருளர் பழங்குடியின கிராமங்கள்

பென்னாகரம் வட்டத்தில் ஆங்காங்கே பரவலாக வசிக்கும் இருளர் பழங்குடியின மக்கள் பொருளாதாரம், சுகாதாரம், கல்வி உள்ளிட்டவற்றில் சுமார் 20 ஆண்டுகள் பின்தங்கிய நிலை யிலேயே இருந்து வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்தில் பென்னாகரம் அருகேயுள்ள வட்டுவனஅள்ளி ஊராட்சி, ஒகேனக்கல் அருகேயுள்ள கூத்தப்பாடி ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் சிறு சிறு குழுக்களாக இருளர் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வனப்பகுதியில் உள்ள குகைகள் தான் இவர்களின் வீடு. பிரதான உணவுத் தேவை வேட்டையின் மூலம் நிறைவேற்றிக் கொள்ளப் படும். மேலும், வனத்தில் விளையும் காய்கறிகள், பழங்கள், தேன் போன்றவற்றை சேகரிப்பர். சொந்த தேவைக்கு போக எஞ்சியிருந்தால் பென்னாகரம், பாப்பாரப்பட்டி போன்ற அருகிலுள்ள பகுதிகளுக்கு சென்று விற்பனை செய்வர்.

வனத்தில் சேகரிக்கப்படும் காய்ந்த விறகுகளை அரு கிலுள்ள ஊர்களுக்குச் சென்று விற்பனை செய்வர். இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு ஆடைகளும், வாழ் வதற்கு தேவையான அவசியமான சில பொருட்களையும் வாங்கிக் கொள்வர். மொத்தத்தில் வனமும், வானமுமே எல்லையாக வாழ்ந்து வந்தனர். வனத்தில் சேகரிக்கும் பொருட்களை விற்பதற்காக எப்போதாவது இவர்கள் வெளியில் வந்தாலும், வனத்திற்கு வெளியில் ஊர்களில் வசிப்பவர்களிடம் பேசவே அச்சப்படுவர்.

சவால் நிறைந்த வாழ்க்கை

வன வாழ்க்கை வாழ்ந்து வந்த இந்த பழங்குடியின மக்கள் வன விலங்குகள், பெரு நோய்கள் போன்றவற்றால் உயிர்ச் சேதங்களை சந்தித்து வந்தனர். இது தவிர, நிலையான வசிப்பிடம் இல்லாததால் மழை, பனி போன்ற இயற்கை நிகழ்வுகளும் இவர்களுக்கு பெரும் சவாலாக இருந்தது.

இந்நிலையில், சில அரசியல் கட்சியினரும், அரசுத் தரப்பும் அவர்களை நிலையான வாழ்க்கை மேற்கொள்ள வைக்க தொடர் முயற்சிகள் மேற்கொண்டனர். அதன் விளைவாக, படிப் படியாக இந்த மக்கள் வனத்தை ஒட்டிய பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர். கூத்தப்பாடி, மேல்குழிப்பட்டி, கீழ் குழிப்பட்டி, எலுமல்மந்தை உள்ளிட்ட பகுதிகளில் அரசு கட்டித் தந்த குடியிருப்புகளில் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அதையொட்டிய, அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களில் மானாவாரி விவசாயம் மேற்கொண்டு உணவுத் தேவையின் ஒருபகுதிக்கு சிறு தானியங்கள், பருப்பு வகைகள் போன்றவற்றை விளைவித்துக் கொள்கின்றனர்.

இருப்பினும் இவர்கள் பொருளாதாரம், சுகாதாரம், கல்வி உள்ளிட்டவற்றில் சுமார் 20 ஆண்டுகள் பின் தங்கிய நிலை யிலேயே உள்ளனர். பெருநகரங்களின் போக்குவரத்து பிரமிப்பு, இயந்திர மய வாழ்க்கைமுறை ஆகியவற்றைக் கண்டு அச்சப்படும் இவர்கள் வேலை தேடி வெளியூர்களுக்கு செல்லவும் பயப்படுகின்றனர்.

‘பங்கு ஆடு’ மேய்த்தல்

தற்போது இவர்களின் வாழ் வாதாரத்திற்கான முக்கிய தொழிலாக ‘பங்கு ஆடு’ மேய்த்தல் தான் உள்ளது. சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த சிலர் முதலீடு செய்து ஆடுகளை வாங்கி விடுவர். அவற்றை தினமும் மேய்த்து பராமரிக்கும் வேலையை பழங்குடியினத்தவர்கள் ஏற்றுக் கொள்வர். ஓராண்டில் ஆடுகள் ஈனும் குட்டிகளில் 50 சதவீத பங்கு மேய்ப் பவர்களுக்கு கிடைக்கிறது.

இதுதவிர, இருளர் இன பெண்களும், வயது முதிர்ந்தவர்களும் தற்போதும் வனத்திற்குள் கிடைக்கும் பொருட்களை சேகரித்து விற்கும் பணிகளில் ஈடுபடுகின்றனர். தேன், சுண்டைக்காய், கூக்கட்டங்காய், புங்கன் காய், புளி, கிழங்கு வகைகள் ஆகியவற்றை சேகரிப்பதன் மூலம் ஓரளவு வருமானம் ஈட்டுகின்றனர். வனத்துறை மூலம் ஒருசில உதவித் திட்டங்கள் இவர் களுக்காக செயல்படுத்தப் படுகிறது. ஆனாலும், நிம்மதியான வாழ்க்கைக்கான பொருளாதாரமாக இதுவெல்லாம் அமைய வில்லை.

இதுபற்றி, குழிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாதையன் கூறும்போது, ‘பாரம்பரியமும், கிராமமும் சார்ந்த தொழில்களையே செய்து வருகிறோம். அரிசி, பருப்பு, பாத்திரத்துடன் வனத்திற்குள் சென்று ஒரு வாரம் வரை தங்கி சுண்டைக்காய், கூக்கட்டங்காய், புங்கன் காய் போன்றவற்றை சேகரித்து வருகிறோம். சுண்டைக்காயை நசுக்கி உலர்த்தி வத்தலாக்கி விற்போம். இங்கு சேகரிக்கும் பொருட்களை பென்னாகரத்தில் தான் விற்பனை செய்கிறோம். சொல்லிக் கொள்ளும் படியாக எந்த பொருளுக்கும் விலை கிடைப்பதில்லை.

இதற்கிடையில், எங்கள் குடும்ப பிள்ளைகளும் குறிப்பிட்ட வகுப்புகளுக்குப் பின்னர் பள்ளிக்குச் செல்ல மறுத்து விடுகின்றனர். வற்புறுத்தினால் வனத்திற்குள் சென்று பதுங்கிக் கொள்கிறார்கள்.

இப்படி விளிம்பு நிலையிலேயே எங்களின் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. அரசு சார்பிலோ, அக்கறையுள்ள தொண்டு நிறுவனங்கள் சார்பிலோ எங்கள் இருளர் சமூக மக்களின் வாழ்வை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தால் தான் ஏதாவது தீர்வு ஏற்படும். இல்லையெனில், ஒவ்வொரு தலை முறையும் இப்படியே வாழ்ந்து மடியத்தான் வேண்டும்.

இருளர் பழங்குடியின கிராமங்களில் இன்னும் ஒரு பட்டதாரி கூட உருவாகவில்லை என்ற தகவலே, இந்த கிராமத்தினரின்வாழ்க்கை நிலையை பிரதிபலிக்கும் சான் றாக இருக்கிறது,’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x