Published : 10 Dec 2017 11:51 AM
Last Updated : 10 Dec 2017 11:51 AM

இன்னும் முழுமையடையாத 27% ஒதுக்கீடு; சமூகநீதியை காக்க சிறப்புத் திட்டம் தேவை: ராமதாஸ் வலியுறுத்தல்

மத்திய அரசுப்பணிகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு முழுமையாக வழங்கப்படாமல் இருப்பதோடு அது குறித்த தகவல்களையெ மத்திய அரசு மறைத்து வருவது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

மத்திய அரசுப் பணிகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு என்பது கடவுள் வரம் கொடுத்தாலும் பூசாரிகள் வரம் கொடுக்காத கதையாகத் தான் நீண்டு கொண்டிருக்கிறது. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு முழுமையாக வழங்கப்படாத நிலையில், அதுகுறித்த தகவல்களைக் கூட வெளியிடாமல் மத்திய அரசு அமைச்சகங்கள் மறைத்து வருவது கண்டிக்கத்தக்கது.

மத்திய அரசு அமைச்சகங்கள், துறைகள், அரசியல் சட்ட அமைப்புகள் ஆகியவற்றிடமிருந்து தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி பெறப்பட்ட தகவல்கள் அதிர்ச்சியளிப்பவையாக உள்ளன. 24 அமைச்சகங்கள், 25 துறைகள், 8 அரசியல் சட்ட அமைப்புகள் ஆகிய 57 அலுவலகங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்களில் 01.01.2017 நிலவரப்படி,‘ஏ’ பிரிவு பணிகளில் 14%, ‘பி’ பிரிவு பணிகளில் 15%, ‘சி’ பிரிவு பணிகளில் 17%, ‘டி’ பிரிவு பணிகளில் 18% மட்டுமே பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த பிரதிநிதித்துவம் போதுமானதல்ல என்பது ஒருபுறமிருக்க, கடந்த காலங்களைவிட இப்போது பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பிரதிநிதித்துவம் அதிகரித்து விட்டதாக மகிழ்ச்சியடையவும் முடியாது. காரணம், மத்திய அரசு அளித்த இந்த விவரங்கள் முழுமையானவை அல்ல.

மத்திய அரசில் 35 அமைச்சகங்களும், 37 துறைகளும் உள்ளன. இவற்றில் 11 அமைச்சகங்களும், 12 துறைகளும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டு விவரங்களை வழங்கவில்லை. உள்துறை, தொடர்வண்டித்துறை, நிதித்துறை, பாதுகாப்புத்துறை ஆகியவை தான் அதிக அளவில் வேலை வழங்கும் துறைகளாகும். இவை உள்ளிட்ட தகவல் வழங்காத 11 அமைச்சகங்களில் உள்ள பணியிடங்களின் அளவு 91.25% ஆகும். தகவல் வழங்கப்பட்டுள்ள 24 அமைச்சகங்களிலுள்ள பணிகள் வெறும் 8.75% மட்டும் தான். எண்ணிக்கையில் கூற வேண்டுமானால், மொத்தமுள்ள 31 லட்சம் மத்திய அரசு பணியாளர்களில் 2.71 லட்சம் பணிகளுக்கான இடஒதுக்கீட்டு விவரங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன. மற்ற துறைகளையும் சேர்த்து கணக்கிட்டுப் பார்த்தால் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டின் அளவு 6 விழுக்காட்டைக் கூட தாண்டாது என்பதே உண்மை.

மண்டல் ஆணையத்தின் பரிந்துரைப்படி, மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அறிவிப்பு 1990-ஆம் ஆண்டு வி.பி. சிங் ஆட்சியில் வெளியிடப்பட்ட போதும், அதற்கான நடைமுறைகள் முடிந்து 08.09.1993 முதல் தான் அது வழங்கப்பட்டு வருகிறது. அதன்பின் 24 ஆண்டுகள் ஆகியும் ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டின் அளவு ஒற்றை இலக்கத்தைக் கூட தாண்டாதது மிகப்பெரிய அநீதி ஆகும். அதுமட்டுமின்றி, அதிகாரம் மிக்க பதவிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அனுமதிக்கப்படுவதே இல்லை என்பது இன்னும் கொடுமையானது. மத்திய அரசின் அதிகார மையம் என்பது மத்திய அமைச்சரவை செயலகம் தான். அங்குள்ள 64 ‘ஏ’ பிரிவு பணியிடங்களில் ஒன்றில் கூட பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அமர்த்தப்படவில்லை. மாறாக 60 பணியிடங்களில் உயர்வகுப்பினரும், 4 பணியிடங்களில் பட்டியலினத்தவரும் அமர்த்தப்பட்டுள்ளனர். இது இயல்பாக நடந்த ஒன்றாக இருக்க முடியாது; திட்டமிட்டு இழைக்கப்பட்ட துரோகமாகவே இருக்கும்.

மத்திய அரசு வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதன் பயனாக கடந்த 2013&ஆம் ஆண்டில் மத்திய பணியாளர் நல அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தவர், பழங்குடியினர் இடஒதுக்கீட்டில் உள்ள பின்னடைவு பணியிடங்களை நிரப்புவதற்காக, அடுத்த 6 மாதங்களில் சிறப்பு ஆள்தேர்வு முகாம்களை சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் நடத்தும் என்று உறுதியளிக்கப்பட்டது. ஆனால், அதன்பின் நான்கரை ஆண்டுகள் ஆகியும் சிறப்பு ஆள்தேர்வு முகாம்கள் எதுவும் நடத்தப்படவில்லை. அதனால் தான் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பில் முழு இடஒதுக்கீடு கிடைக்கவில்லை. இதற்கு மத்திய அரசே பொறுப்பு.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு முழுமையான இட ஒதுக்கீடு கிடைக்க பெரும் தடையாக இருப்பவை கிரீமிலேயர் என்ற பெயரில் தகுதி வாய்ந்தவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது, பின்னடைவு பணிகள் குறித்த காலத்தில் நிறைவேற்றப்படாதது ஆகியவை தான். இந்த குறைகள் சரி செய்யப்படும்வரை மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு என்பது அரைகுறையானதாகவே இருக்கும். இது சமூகநீதிக் கொள்கைக்கு இழைக்கப்படும் துரோகமாகும்.

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கிரீமிலேயர் முறையை நீக்குதல், பின்னடைவுப் பணியிடங்களை நிரப்ப சிறப்பு ஆள்தேர்வு முகாம்களை நடத்துதல் ஆகியவை அடங்கிய சிறப்புத் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்துவதன் மூலமாக மட்டுமே இந்த குறையை சரி செய்ய முடியும். எனவே, அத்தகைய சிறப்புத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்தி, பின்னடைவு பணியிடங்களை நிரப்பி பிற பிற்படுத்தப் பட்டோருக்கு முழுமையான சமூக நீதியை வழங்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x