Published : 10 Dec 2017 10:58 AM
Last Updated : 10 Dec 2017 10:58 AM

பல்லாவரத்தில் தொல்லியல் துறை ஆய்வில் முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு

பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதி ஜமீன் பல்லாவரம் பகுதியில் பண்டைய கால பொருட்கள் பூமியில் புதைந்துள்ளதாகக் கூறி அங்கு ஆய்வு செய்ய தொல்லியல் துறை திட்டமிட்டது. ஆய்வு நடைபெறும் இடங்களில் வீடுகள் கட்டவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதற்கு அப் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் அப்பகுதி மக்களின் எதிர்ப்பையும் மீறி அதிகாரிகள் மூலம் நில அளவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தொல்லியல் துறை ஆய்வு நடைபெறும் இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டன.

இந்நிலையில் தொல்லியல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர்கள் கொண்ட குழு ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின்போது சில இடங்களில் உடைந்த நிலையில் முதுமக்கள் தாழி கிடைத்தது. அம்பேத்கர் விளையாட்டு திடல் பகுதியில் ஆய்வு செய்ததில் சுடு மணலால் செய்யப்பட்ட பழங்கால முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டது.

ஒன்றரை அடி அகலம், 6 அடி நீளமும் கொண்ட தாழியின் அடிப்பகுதியில் 1 அடியில் 12 கால்கள் மணலால் செய்யப்பட்டிருந்தன.ஆய்வில் கிடைக்கப்பட்ட முதுமக்கள் தாழியை சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள ஆய்வகத்துக்கு தொல்லியல் துறையினர் கொண்டு சென்றனர்.

இதுகுறித்து தாம்பரம் கோட்டாட்சியர் சந்திரசேகரனிடம் கேட்டபோது, ‘‘நீதிமன்றம் அமைத்த நிபுணர் குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது. நாங்கள் நிலங்களை அளவீடு செய்து கொடுத்துவிட்டோம். அங்கு கண்டறிந்த பொருட்கள் எவ்வளவு பழமையானது என்பது ஆய்வுக்குப் பிறகு தெரியவரும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x