Published : 10 Dec 2017 10:53 AM
Last Updated : 10 Dec 2017 10:53 AM

திருப்பதியில் அர்ச்சகராகும் தாழ்த்தப்பட்டோர் தமிழக அரசும் அனைத்து சாதியினரையும் தயங்காமல் அர்ச்சகராக்க வேண்டும்: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தல்

திருப்பதி கோயில் தேவஸ்தானமே தாழ்த்தப்பட்டவர்களுக்கு பயிற்சி அளித்து அர்ச்சகர்களாக நியமிக்க உள்ளதால், தமிழ்நாடு அரசு தடுமாறாமல், தயங்காமல் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பார்ப்பனர்கள் அல்லாதவர்களும் அர்ச்சகர் ஆகும் வகையில் 200-க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்டது. விரைவில் இவர்களை அர்ச்சகர் பணியில் அமர்த்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

கேரளாவில் உள்ள பல கோயில்களை உள்ளடக்கிய திருவாங்கூர் தேவஸ்தானம் தாழ்த்தப்பட்டவர்களை அர்ச்சகர்களாக நியமனம் செய்துள்ளது. இதில் 6 பேர் தற்போது கேரள கோயில்களில் பணி செய்து வருகின்றனர். பிற்படுத்தப்பட்டவர்கள் 30 பேர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். கர்நாடக அரசும் தாழ்த்தப்பட்டவர்களை அர்ச்சகர்களாக நியமிக்கும் புதிய சட்டவரைவை விரைவில் கொண்டு வர உள்ளதாக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநில பாந்தார்பூரில் 900 ஆண்டுகள் பழமையான ருக்மணி அம்மன் கோயிலில் அன்றாடப் பூஜைகள் செய்ய பெண் அர்ச்சகர்கள் மற்றும் உயர் வகுப்பினர் அல்லாத இதர பிரிவினரையும் அர்ச்சகர்களாக நியமிக்கலாம் என்று மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து 129 பெண்கள் விண்ணப்பித்ததில், 16 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு அர்ச்சகர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமனம் செய்வதில் எந்தத் தடையும் இல்லை. திருப்பதி கோயிலிலேயே தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பயிற்சி அளித்து அர்ச்சகர்களாக நியமிக்க முன்வந்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசும் தடுமாறாமல், தயங்காமல் அனைத்து சாதியினரையும் அர்ச்சர்களாக நியமிக்க வேண்டும் என்று கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x