Published : 10 Dec 2017 09:58 AM
Last Updated : 10 Dec 2017 09:58 AM

தேர்தல் விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

தேர்தல் விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடப்பதை முன்னிட்டு, அங்கு பணப் பட்டுவாடா மற்றும் விதிமீறல்கள் ஏற்படாமல் தடுக்க தேர்தல் ஆணையம் முழு மூச்சாக களம் இறங்கியுள்ளது. இந்நிலையில் தேர்தல் விதிமீறல்களை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என தேர்தல் பார்வையாளர்கள் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்த கூட்டத்தில், தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி பங்கேற்று அதிகாரிகளுக்கு இது தொடர்பாக உத்தரவிட்டுள்ளார்.

பின்னர் ராஜேஷ் லக்கானி நிருபர்களிடம் கூறியதாவது:

ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் விதிமுறைகள் மீறப்படுவதாகவும் அதை காவல்துறை மற்றும் தேர்தல் அலுவலர்கள் கண்டு கொள்ளவில்லை என்றும் தேர்தல் ஆணையத்துக்கு புகார் வந்துள்ளது. தேர்தல் பிரச்சாரத்துக்காக தொகுதிக்குள் அதிகளவில் வெளியூர் வாகனங்கள் கொண்டுவரப்படுகின்றன.

அந்த விதிமீறல் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் பார்வையாளர்கள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து, தேர்தல் பணியில் உள்ள அதிகாரிகளை அழைத்து அறிவுரை வழங்கியுள்ளேன், தேர்தல் விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். தேர்தல் பிரச்சாரத்துக்கு அனுமதி பெறாமல் பயன்படுத்தப்பட்ட 3 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அந்த வாகனங்கள் யாருக்காக வரவழைக்கப்பட்டன என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகளை வரும் 19-ம் தேதி மாலை 5 மணி வரை வெளியிடலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x