Published : 10 Dec 2017 09:43 AM
Last Updated : 10 Dec 2017 09:43 AM

ஆர்.கே.நகர் தொகுதியில் மதுசூதனன், மருது கணேஷ், தினகரன் போட்டியிட அனுமதிக்கக்கூடாது: உயர் நீதிமன்றத்தில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் வழக்கு

ஆர்.கே.நகர் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.சி.சத்தியமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது. அப்போது, அ.தி.மு.க. (அம்மா) சார்பில் டிடிவி. தினகரன், அ.தி.மு.க. (புரட்சித் தலைவி அம்மா) சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருதுகணேஷ் உட்பட பலர் போட்டியிட்டனர். தேர்தலில் தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு வேட்பாளர்கள் பணம் கொடுத்தனர். அதிலும், டிடிவி. தினகரன் தரப்பினர், வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்களை வாரி வழங்கினர். இதற்கு ஆதாரமாக அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித் துறை நடத்திய சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கின.

இந்நிலையில், வரும் 21-ம் தேதி ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலிலும் மதுசூதனன், டிடிவி. தினகரன், மருதுகணேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்களை மீண்டும் போட்டியிட அனுமதித்தால், மீண்டும் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்து மிகப்பெரிய முறைகேட்டில் ஈடுபடுவார்கள். இதை அனுமதித்தால், ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி விடும்.

எனவே, டிடிவி. தினகரன், மதுசூதனன், மருதுகணேஷ் ஆகியோரை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது. அவர்களை தகுதியிழக்கச் செய்யவேண்டும் என்று கடந்த 6-ம் தேதி நான் கொடுத்த கோரிக்கை மனுவை பரிசீலிக்கவும், 3 பேரையும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கவும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x