Published : 10 Dec 2017 09:12 AM
Last Updated : 10 Dec 2017 09:12 AM

புயலில் சிக்கி தவித்த மீனவர்கள் கரை திரும்புகின்றனர்: கொச்சி வழியாக 87 பேர் தமிழகம் வந்தனர் - உயிர் தப்பியவர்களைப் பார்த்து உறவினர்கள் கண்ணீர்

புயல் காரணமாக லட்சத்தீவு, மகாராஷ்டிராவில் கரை ஒதுங்கிய தமிழக மீனவர்கள் 87 பேர் நேற்று கொச்சி வந்தனர்.

கடந்த 29-ம் தேதி நள்ளிரவில் ஏற்பட்ட ‘ஒக்கி’ புயலால் குமரி மாவட்டத்தில் பெரும் பாதிப்பு நிகழ்ந்தது. புயல் எச்சரிக்கை வரும் முன்பே ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்கச் சென்றிருந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், புயலின் வேகத்தில் பல்வேறு திசைகளில் அடித்துச் செல்லப்பட்டனர். இவர்கள் லட்சத்தீவு, குஜராத், மகாராஷ்டிரா மாநில கடல் பகுதியில் கரைஒதுங்கி தவிப்பதாக தெரியவந்தது. இவர்களை மீட்கும் வகையில் இம்மாநிலங்களுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

லட்சத்தீவில் உள்ள கவரத்தி தீவில் கரை ஒதுங்கி இருந்த 44 மீனவர்கள் நேற்று அதிகாலை கடற்படை கப்பல் மூலம் கொச்சி துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்களில் குமரி மாவட்டம் தூத்தூர், நீரோடி, இரயுமன்துறையைச் சேர்ந்தவர்களும் தூத்துக்குடி, நாகப்பட்டினம், ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களும் இருந்தனர். இவர்களை தமிழக மற்றும் கேரள மீன்வளத்துறை உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.

அவர்களுக்கு மருத்துவ வசதி, உணவு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. பின்னர், பயண உதவித்தொகையாக தலா ரூ. 2,000 வழங்கப்பட்டு, சொந்த ஊர்களுக்கு வேன் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

2-வது குழுவில் 16 பேர்

அடுத்தகட்டமாக, லட்சத்தீவில் ஆன்ருஸ் என்ற பகுதியில் இருந்து கேரளா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 2 விசைப்படகுகளில் 16 பேர் நேற்று மதியம் 3 மணியளவில் கொச்சி துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களை உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர். உயிர் தப்பி வந்தவர்கள் கூறும்போது, “புயலால் படகுகள் செயல்படாமல் திசைமாறி லட்சத்தீவுக்குச் சென்று, ஊர் திரும்ப முடியாமல் தவித்தோம். 5 நாட்களுக்கு மேல் உணவு, தண்ணீர் கிடைக்காமல், கிடைத்த உணவை பகிர்ந்து உண்டோம். கடலில் மூழ்கிவிடும் நிலை வருமோ என்று அஞ்சியிருந்தோம். உயிர் பிழைப்போம் என்று நம்பவேயில்லை. மறுபிறவி எடுத்துள்ளோம்” என தெரிவித்தனர்.

3-வது குழுவில் 27 பேர்

கடந்த 6-ம் தேதி தேங்காய்பட்டினத்தில் இருந்து தூத்தூர், ராமநாதபுரம், நாகப்பட்டினம், தூத்துக்குடி, கேரளா மற்றும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மீனவர்கள் 18 பேர் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். அதே நாளில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் கடலுக்குச் சென்றிருந்தனர். இவர்கள் 27 பேரும் புயலின்போது திசைமாறி, மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி கடல் பகுதியில் கரை ஒதுங்கினர். அவர்கள் விசைப்படகு மூலம் கொச்சி வழியாக நேற்று காலை தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தனர். அவர்களை உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர். இவ்வாறு 3 குழுவாக, நேற்று ஒரே நாளில் மாலை வரை 87 மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x