Published : 10 Dec 2017 09:26 AM
Last Updated : 10 Dec 2017 09:26 AM

மாயமான மீனவர்களை மீட்கக் கோரி குமரி கிராமங்களில் 3-வது நாளாக மறியல்: 2 எம்எல்ஏக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

‘ஒக்கி’ புயலின்போது கடலில் மாயமான மீனவர்களை மீட்க வலியுறுத்தி குமரி கடற்கரை கிராமங்களில் நேற்று 3-வது நாளாக பல இடங்களில் சாலை மறியல் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

புயலில் மாயமான மீனவர்களை மீட்கக் கோரியும், புயலில் இறந்தவர்களுக்கான நிதியுதவியை ரூ. 20 லட்சமாக வழங்க வலியுறுத்தியும், குழித்துறையில் கடந்த 7-ம் தேதி 8 ஆயிரம் பேர் தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் செய்தனர். நேற்று முன்தினம் குளச்சல், தேங்காய்பட்டினம், மணவாளக்குறிச்சி, கடியப்பட்டினம் மீனவ கிராமங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

3-வது நாளாக மறியல்

நேற்றும் 3-வது நாளாக மீனவர்களின் போராட்டம் தொடர்ந்தது. கன்னியாகுமரி பழைய பேருந்து நிலையம் முன் காலை 10.30 மணிக்கு நடந்த மறியலில் ஆஸ்டின் எம்.எல்.ஏ., பங்குத் தந்தையர், பங்கு பேரவை நிர்வாகிகள் மற்றும் கன்னியாகுமரி, ஆரோக்கியபுரம், வாவத்துறை, சின்னமுட்டம், புதுக்கிராமம், கோவளம், சிலுவைநகர் உள்ளிட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள், பெண்கள் பங்கேற்றனர். சுமார் 2 மணி நேரம் நீடித்த இப்போராட்டத்தால் கன்னியாகுமரியில் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

இதுபோல், ராஜாக்கமங்கலத்தை அடுத்துள்ள கல்லுகட்டி சந்திப்பில் அழிக்கால், பிள்ளைத்தோப்பு மீனவ கிராமத்தினர் சாலைமறியல் செய்தனர். பிள்ளைத்தோப்பு பங்குதந்தை அருள்சீலன், அழிக்கால் பங்குதந்தை டொனார் பியோஸ், சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. உட்பட பலர் கலந்துகொண்டனர். இதனால், நாகர்கோவில் -குளச்சல் சாலையில் போக்குவரத்து முடங்கியது.

ஆர்ப்பாட்டம்

சின்னத்துறையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மார்த்தாண்டம்துறை, நீரோடி, இரவிபுத்தன்துறை, பூந்துறை, தூத்தூர், இரயுமன்துறை, சின்னத்துறை ஆகிய கிராமங்களைச் சேர்ந்தோர் கலந்துகொண்டனர். ஏற்கெனவே, புயல் பாதிப்பால் சேதமான மரங்கள், மின்கம்பங்களை சீரமைக்கும் பணியால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.

இந்நிலையில், ஆங்காங்கே நடைபெறும் மறியல் போராட்டங்களாலும் போக்குவரத்து பெரிதும் பாதிப்படைகிறது.

மறியல் நடந்த பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டிருந் தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x