Last Updated : 10 Dec, 2017 09:26 AM

 

Published : 10 Dec 2017 09:26 AM
Last Updated : 10 Dec 2017 09:26 AM

‘எங்களை அடிமைகள் போல நடத்துகின்றனர்’: தமிழக காவல் துறை அதிகாரிகள் மீது வெடிகுண்டு நிபுணர்கள் புகார் - பாதுகாப்பு துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பினர்

காவல் துறை அதிகாரிகள், தங்களை அடிமைகள் போல நடத்துவதாக வெடிகுண்டு நிபுணர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழக காவல் துறையில் வெடிகுண்டு நிபுணர்கள் பிரிவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ராஜீவ்காந்தி மறைவுக்கு பின்னர், 1991-ம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் முயற்சியால் தமிழகத்தில் ‘வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு’ (பிடிடிஎஸ்) என்ற பிரிவு உருவாக்கப்பட்டது. ராணுவத்தில் வெடிகுண்டு பிரிவில் பணிபுரிந்தவர்களைக் கொண்டு இந்த பிரிவு செயல்படுத்தப்பட்டது.

பிடிடிஎஸ் பிரிவில் சென்னை யில் மட்டும் 70 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 150 பேர் பணிபுரிகின்றனர். முதல்வர், ஆளுநர் ஆகியோர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடம் முழுவதும் சோதனை நடத்தி பாதுகாப்பை உறுதி செய்வது இவர்களது முக்கிய பணியாக உள்ளது. குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் வரும்போது வெடிகுண்டு சோதனை நடத்துவதும் இவர்கள்தான். மேலும், வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தால், போலீஸார் முதலில் தகவல் கொடுப்பதும் இவர்களுக்குத் தான்.

முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு பணியை செய்யும் வெடிகுண்டு நிபுணர்கள், தமிழக காவல் துறையில் தங்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை என்று வேதனைப்படுகின்றனர். இதுகுறித்து வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு பிரிவில் பணியாற்றும் நபர்கள் இணைந்து, பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ஒரு புகார் மனுவை அனுப்பியுள்ளனர். அதில் கூறியிருப்ப தாவது:

தமிழக அரசு கேட்டுக்கொண்டதன் பேரிலேயே, முன்னாள் ராணுவ வீரர்களைக் கொண்டு பிடிடிஎஸ் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழக காவல் துறையினர் எங்களை அடிமைகளைப் போல நடத்துகின்றனர். வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்கும் கருவிகள் எதுவுமே தமிழக காவல் துறையிடம் இல்லை. தமிழக காவல் துறையில் தற்போது பயன்படுத்தப்படும் கருவிகள் அனைத்தும் 6 ஆண்டுகளுக்கு முன்பே காலாவதியானவை. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

எந்தக் கருவியும் இல்லாமல், முதல்வர் பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் தினமும் 8 முதல் 10 கி.மீ. தொலைவுக்கு நடக்க வைக்கின்றனர். இதுபற்றி புகார் தெரிவித்தால், காவல் துறை அதிகாரிகள் எங்களை மிரட்டுகின்றனர். அடிமைகளைப் போல இருங்கள் என்று வெளிப்படையாகவே கூறுகின்றனர்.

மதுரையில் பைப் வெடிகுண்டை கண்டுபிடித்தது நாங்கள்தான். இதை அறிந்த அத்வானி எங்களை நேரில் அழைத்துப் பாராட்டினார். ராணுவத்தில் எங்கள் பணி மிகவும் மதிப்புக்கு உரியதாக இருந்தது. தமிழக காவல் துறைக்கு அதன் முக்கியத்துவம் தெரியவில்லை.

வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்கும் கருவிகளை தமிழக காவல் துறை உடனடியாக வாங்க வேண்டும். எங்களை அடிமைகளைப்போல நடத்துவதையும், மிரட்டுவதையும் காவல் துறை அதிகாரிகள் கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

இதே புகார் மனுவை தமிழக ஆளுநர், தமிழக அரசின் முதன்மைச் செயலாளருக்கும் வெடிகுண்டு நிபுணர்கள் அனுப்பி யுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x