Last Updated : 10 Dec, 2017 09:27 AM

 

Published : 10 Dec 2017 09:27 AM
Last Updated : 10 Dec 2017 09:27 AM

22 ஆண்டுகளாக முறையான பாடப் புத்தகங்கள் இல்லை: ஊசலாடுகிறது பள்ளி உடற்கல்வித்துறை - புதிய பாடத்திட்டத்தில் முக்கியத்துவம் தரப்படுமா ?

முறையான பாடத் திட்டங்கள், பாடப் புத்தகங்கள் இல்லாமல் கடந்த 22 ஆண்டுகளாக உடற்கல்வித் துறை தமிழகத்தில் ஊசலாடுகிறது. தற்போது, பள்ளி கல்வித்துறை வரைவு பாடத்திட்டம் வெளியாகியுள்ள நிலையில், உடற்கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளவும், தமிழக மாணவர்கள் சர்வதேச தரத்துக்கு கல்வி பயில வைக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க பள்ளி கல்வித்துறை உத்தேசித்துள்ளது. இதற்காக வரைவு பாடத்திட்டத்தையும் அரசு வெளியிட்டிருக்கிறது.

இதில் 1 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு உடற்கல்வி பாடங்களும் இடம்பெற்றிருக்கின்றன. உடற்பயிற்சிகளுடன், யோகா, மூச்சுப்பயிற்சி என்று அந்தந்த வயதினருக்கான பயிற்சிகளையும், விளையாட்டுகளையும் இந்த பாடத்திட்டத்தில் கொண்டு வந்துள்ளனர்.

நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஆனால், மற்ற பாடங்களுக்கு புத்தகங்கள் அச்சிட்டு மாணவர்களுக்கு அளிப்பதுபோல் உடற்கல்விக்கான பாடப்புத்தகங்களை அச்சிடவும், பாடத்திட்டத்தை வரையறுத்து உடற்கல்வி ஆசிரியர்களுக்கு அளிக்கவும் கல்வித்துறை நடவடிக்கை எடுக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

காரணம், கடந்த 22 ஆண்டுகளாகவே தமிழக பள்ளிகளில் உடற்கல்விக்கான பாடத் திட்டங்களோ, பாடப் புத்தகங்களோ இல்லாமல் உடற்கல்வி பாட வகுப்புகள் முடிவுக்கு வந்திருக்கின்றன. இதனால், உடற்கல்வியின் முக்கியத்துவத்தை மாணவர்கள் உணரமுடியாத சூழல் நிலவுகிறது.

உடற்கல்வி கட்டாயம்

கடந்த 19.5.1975-ல் பள்ளி கல்வி இயக்குநரின் செயல்முறைகளுக்கு இணங்க உடற்கல்விக்கு புத்தகங்கள் வழங்க ஆணையிடப்பட்டது. 1975-76-ம் கல்வியாண்டில் உடற்கல்வி கட்டாய பாடமாக்கப்பட்டு, அதில் பெறும் மதிப்பெண்கள் தேர்ச்சிக்கும் கணக்கில் எடுத்துக்கொள்ளும் நிலை இருந்தது.

1995-ம் ஆண்டுக்கு பின் பாடத்திட்டங்களோ, புத்தகமோ இல்லாத நிலையில் தற்போதுவரை உடற்கல்வித்துறை ஊசலாடுகிறது. அரசு கொண்டுவந்த சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தின் போது உடற்கல்விக்கு 9-ம் வகுப்புக்கு மட்டும் கையேடு வழங்கப்பட்டது. அதுவும் அந்த ஆண்டிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது.

புத்தகம் இல்லா கல்வி

இதுதொடர்பாக தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர்- உடற்கல்வி இயக்குநர்கள் சங்க மாநில பொருளாளரும், திருநெல்வேலி நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியருமான வி.பெரியதுரை கூறியதாவது: மற்ற பாட ஆசிரியர்களைப்போல்தான் முறையான பயிற்சிக்குப் பின், உடற்கல்வி ஆசிரியர்களாக வருகிறோம். ஆனால், மற்ற பாட ஆசிரியர்கள், பாடத்திட்டம் மற்றும் புத்தகங்களோடு மாணவ, மாணவியருக்கு பாடம் கற்பிக்கும்போது நாங்கள் மட்டும் பாடத் திட்டமோ, புத்தகங்களோ இல்லாமல் உடற்கல்வியை போதிக்கும் நிலையுள்ளது.

சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை உருவாக்கும்போது உடற்கல்வி பாடத் திட்டத்தை உருவாக்கும் குழுவில் இடம்பெற்றிருந்தேன். அந்த பாடத்திட்டத்தையே தற்போது அரசு வெளியிட்டுள்ள வரைவு பாடத்திட்டத்திலும் சேர்த்திருக்கிறார்கள்.

இந்த பாடத்திட்டத்தை இறுதி செய்து அளிக்கவும், அதற்கான முறையான பாடப்புத்தகங்களை தயாரித்து மாணவ, மாணவியருக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கையை அரசின் இணையதளத்தில் பலரும் பதிவு செய்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

வகுப்புகளையும் ஒதுக்குவதில்லை

தமிழகத்தில் 1 முதல் பிளஸ் 2 வரையிலான 54 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தற்போது 6 ஆயிரம் உடற்கல்வி ஆசிரியர்களே பணியாற்றுகிறார்கள். ஆசிரியர்கள் பற்றாக்குறை இருக்கும் அதேநேரத்தில், உடற்கல்விக்கான வகுப்புகளை ஒதுக்காமல் அந்நேரத்திலும் பிற பாடங்கள் நடத்தப்படுகின்றன.

இந்நிலை தொடர்ந்தால் தலைசிறந்த விளையாட்டு வீரர்களை எப்படி உருவாக்க முடியும்? என்பது உடற்கல்வி ஆசிரியர்களின் கேள்வி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x