Published : 18 Nov 2017 10:12 AM
Last Updated : 18 Nov 2017 10:12 AM

ரூ.10 நாணயத்தை வாங்க மறுத்தால் புகார் தெரிவிக்கலாம்: தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு

பத்து ரூபாய் நாணயங்கள் சட்டப்படி செல்லும். எனவே அவற்றை வாங்க மறுப்பவர்கள் பற்றி புகார் தெரிவிக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

மத்திய அரசால் தயாரிக்கப்பட்ட நாணயங்களை ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விடுகிறது. ரூபாய் நோட்டுகளை விட நாணயங்கள் நீண்ட காலத்துக்கு புழக்கத்தில் இருக்கும். ஒரே மதிப்பில் வெவ்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் இந்த நாணயங்கள் புழக்கத்தில் இருந்து வருகின்றன. அந்த வகையில் புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்களிலும் அவ்வப்போது பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு தயாரிக்கப்படுகின்றன.

ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்களில் இருந்து அவை சற்றே மாறுபட்டுத் தோன்றினாலும், அனைத்துமே சட்டப்படி செல்லுபடியாகும். இந்த நாணயங்கள் அனைத்து விதமான பரிவர்த்தனைகளுக்கும் ஏற்றவை.

இருப்பினும் பத்து ரூபாய் நாணயங்கள் குறித்து தேவையற்ற வதந்திகள் பரப்பப்படுவதால் சில இடங்களில் இந்த நாணயங்களைப் பெற்றுக் கொள்வதில் பொதுமக்கள் தயக்கம் காட்டுகின்றனர். இந்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறது. இருப்பினும் தமிழ்நாட்டில் பல இடங்களிலும் வணிக மையங்களிலும் கடைகளிலும் இந்த நாணயங்களைப் பெற்றுக் கொள்வதில்லை என்று ரிசர்வ் வங்கிக்கு புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. இந்த 10 ரூபாய் நாணயங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்பதை ரிசர்வ் வங்கி மீண்டும் ஒருமுறை உறுதிபடுத்துகிறது.

10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற வதந்திகளை புறக்கணித்து 10 ரூபாய் நாணயங்களை தொடர்ந்து பயன்படுத்தலாம். புதிய மற்றும் பழைய 10 ரூபாய் நாணயங்கள் அனைத்தும் புழக்கத்தில் நீடிக்கும். இதனை தடையோ, ரத்தோ செய்யவில்லை.

பொது மக்களும், வணிகர்களும் 10 ரூபாய் நாணயங்களைப் பயன்படுத்துவதற்கு தடையேதும் கிடையாது. இவ்வாறு 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பவர்கள் பற்றி, ரிசர்வ் வங்கியின் வழங்கல் துறைக்கு 044 25399222 என்ற எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x