Published : 13 Oct 2017 06:22 PM
Last Updated : 13 Oct 2017 06:22 PM

ஜெயலலிதா கைரேகை விவகாரம்: மதுசூதனன் உறுதியின் பேரில் ஏற்றுக்கொண்டோம்- தேர்தல் ஆணைய அதிகாரி விளக்கம்

ஜெயலலிதாவுக்கு உடல்நிலை சரியில்லை அதனால் அவரது கைரேகை பெறப்பட்டுள்ளது என்று அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உறுதி அளித்ததன் பேரில்தான் கைரேகையை ஏற்றுக்கொண்டோம் என்று தேர்தல் ஆணைய முதன்மை செயலர் உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதி இடைதேர்தல்கள் நடைபெற்றன. தேர்தல் ஆணையத்துக்கு அளிக்கும் 'பார்ம் பி' படிவத்தில், அரசு மருத்துவர்கள் முன்னிலையில் அதிமுக பொதுச் செயலாளர் என்ற முறையில் வேட்பாளர்களுக்கான அங்கீகாரம் அளிக்கும் வகையில் ஜெயலலிதாவின் கைரேகை பெறப்பட்டது.

தேர்தல் நடந்த நேரத்தில் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா, அதிமுக வேட்பாளர் போஸை அங்கீகரித்து வேட்புமனுவின் படிவம் ஏ, பி ஆகியவற்றில் இடதுகை பெருவிரல் ரேகையை பதிவுசெய்து, அதை சென்னை அரசு பொது மருத்துவமனை பேராசிரியர் பாலாஜி சான்றளித்து தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த வழக்கில் தமிழக தேர்தல் அதிகாரி, சுகாதாரத்துறை செயலர், தேர்தல் ஆணைய முதன்மை செயலாளர் வில்பர்ட், டாக்டர் பாலாஜி உள்ளிட்டோர் ஆஜராகி விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன் படி வேட்புமனுவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கைரேகை தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்ட 20 ஆவணங்களுடன், தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.  சுகாதாரத்துறை செயலரும் விளக்கம் அளித்துவிட்டார்.

இன்று தேர்தல் ஆணைய முதன்மை செயலாளர் வில்பர்ட் ஆஜரானார். அவரிடம் ஜெயலலிதாவின் கைரேகையை எந்த அடிப்படையில் ஏற்றுக்கொண்டீர்கள் என கேட்கப்பட்டது.

பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு  உடல்நிலை சரியில்லை என்பதால் கையெழுத்துக்கு பதில் கைரேகை வைக்க அனுமதி கேட்கப்பட்டது. அவைத்தலைவர் மதுசூதனன் உறுதியின் பேரில் கைரேகை வைக்க அனுமதி அளிக்கப்பட்டது என்றார். ஜெயலலிதா உடல்நிலை மருத்துவ அறிக்கை இணைக்க சொன்னீர்களா என்று கேட்கப்பட்டதற்கு இல்லை என்று பதிலளித்தார்.

அவரது விளக்கத்தை அடுத்து கைரேகை குறித்து ஒப்புதல் அளித்த டாக்டர் பாலாஜியை வரும் அக்.27 அன்று ஆஜராக உத்தரவிட்ட நீதிபதி வேல்முருகன் வழக்கை 27 அன்று ஒத்திவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x