Published : 13 Oct 2017 06:05 PM
Last Updated : 13 Oct 2017 06:05 PM

டெங்குவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்: வாசன்

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை சரியாக கணக்கிட்டு அவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாயை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் நாளுக்கு நாள் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. கடந்த ஒரு மாத காலமாக மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டப்பகுதிகளில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுவரையில் டெங்குவால் பாதிக்கப்பட்டு நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே தமிழக அரசு மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை சரியாக கணக்கிட்டு அவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாயை வழங்க வேண்டும்.

தற்போது டெங்கு காய்ச்சலால் நாள்தோறும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. நகரம் முதல் கிராமம் வரை உள்ள அனைத்து தரப்பு மக்களும் டெங்கு காய்ச்சல் குறித்த பயத்துடனும், கவலையுடனும் இருக்கிறார்கள். வெளிநாடுகளில் டெங்கு காய்ச்சலை எதிர்கொள்ள பயன்படுத்தும் நவீன மருத்துவ யுக்திகளை தமிழகத்தில் கையாளக்கூடிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

தமிழக அரசும் மாநிலம் முழுவதும் நகரம் முதல் கிராமம் வரை உள்ள அனைத்து ஊர்களிலும் கழிவு நீர் தேங்காமல் இருப்பதற்கும், குப்பைகளை உடனடியாக அகற்றவும் தொடர் நடவடிக்கைகளை எடுத்து சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும். டெங்கு கொசு உற்பத்தியாகாமல் இருக்க நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 24 மணி நேர தொடர் மருத்துவச் சேவையை வழங்க வேண்டும்.

டெங்குவின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நிலவேம்பு கசாயத்தை மாநிலம் முழுவதும் அனைத்துப்பகுதியிலும் உள்ள பொது மக்கள் அனைவருக்கும் கொடுக்கக்கூடிய பணிகளை இந்நோயின் தாக்கம் முடியும் வரை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். டெங்கு நோயின் பிடியிலிருந்து பொது மக்களை பாதுகாக்க நிலவேம்பு கசாயம் கொடுக்கும் பணியில் தமாகாவினர் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.

மேலும் தமிழக அரசு உடனடியாக மத்திய அரசோடு தொடர்பு கொண்டு - மத்திய, மாநில அரசுகளின் சார்பில் வெளிநாடுகளுடன் கலந்து பேசி, அந்நாடுகளில் பயன்படுத்தப்படும் நவீன சிகிச்சை முறைகளை நம் நாட்டிலும் குறிப்பாக தற்போதைய அவசர, அவசிய சூழலில் உடனடியாக தமிழகத்திலும் பொது மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் பயன்படுத்திட வேண்டும். குறிப்பாக டெங்குவை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும்.

இதுவரை தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை டெங்குவை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மேற்கொண்ட பணிகள் போதுமானதல்ல. மேலும் தாமதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இனிமேலாவது இந்த முக்கியப் பிரச்சினைகளில் தமிழக அரசு அதிக விழிப்புடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

முக்கியமாக டெங்குவால் ஏற்படுகின்ற உயிரிழப்பை தடுத்து, பொதுமக்களை பாதுகாக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டியது ஆளும் ஆட்சியாளர்களின் கடமை'' என்று வாசன் கூறியுள்ளார்.   

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x