Published : 13 Oct 2017 04:52 PM
Last Updated : 13 Oct 2017 04:52 PM

108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய உயர் நீதிமன்றம் தடை

108 ஆம்புலன்ஸ் நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. மீறி வேலை நிறுத்தம் செய்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க வேண்டி இருக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

தீபாவளி போனஸ் உள்ளிட்ட 27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜி.வி.கே- ஈ.எம்.ஆர்.ஐ. நிர்வாகத்துடன் ஆம்புலன்ஸ் ஊழியர் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போனஸ் வழங்காவிட்டால் தீபாவளியை கணக்கில் கொண்டு அக்டோபர் 18-ஆம் தேதி இரவு 8 முதல்19-ஆம் தேதி இரவு 8 மணி வரை சுமார் 4 ஆயிரம் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

சேவை நிறுவனம் என்பதால் போனஸ் சட்டத்துக்கு உட்பட்டது இல்லை என்றாலும், ஆம்புலன்ஸ் சேவை பாதிக்கக் கூடாது என்பதற்காக 3 ஆண்டுகளாக ஊக்கத் தொகையை வழங்குவது போல, இந்த ஆண்டும் 5,300 ரூபாய் வழங்கப்பட்டாலும், 25 சதவீதம் கேட்டு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக ஜிவிகே இஎம்ஆர்ஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஆண்டு உயர் நீதிமன்றம் விதித்திள்ள தடையையும் மீறி, வேலை நிறுத்தம் அறிவித்து இருப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் பேட்ரிக் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, எம்.சுந்தரம் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் பேட்ரிக், தீபாவளி நேரத்தில் பட்டாசு விபத்துகள் ஏற்படும். அப்போது அவசர சிகிச்சைக்கு ஆம்புலன்ஸ் ஊழியர்களின் சேவை அத்தியாவசியமானது. இந்த நிலையில், அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் உயிர்பலி ஏற்படும். எனவே அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடாமல் தடுக்க வேண்டும் என வாதிட்டார்.

அப்போது அரசு வழக்கறிஞர் ஆஜராகி ஆம்புலன்ஸ் நிறுவனத்துடனும், ஊழியர்கள் சங்கத்துடனும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவித்தார். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், கடந்த ஆண்டு உத்தரவுப்படி ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது சட்டவிரோதம் என ஏற்கெனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்த அடிப்படையில் இந்த ஆண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடக் கூடாது என தடை விதிக்கிறோம் என்றனர்.

அரசு தரப்பு வழக்கறிஞர் பதிலளிக்கும் போது ''ஆம்புலன்ஸ் நிறுவனம் தனியார் நிறுவன பங்களிப்பில் நடக்கிறது. கடந்த ஆண்டே நீதிமன்றம் வேலை நிறுத்தத்துக்கு தடை விதித்துள்ளது அதை மீறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயும், பேச்சு வார்த்தையில் உடன்பாடு வராமல் அவர்கள் போராட்டம் நடத்தினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க வேண்டியிருக்கும்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x