Published : 13 Oct 2017 04:50 PM
Last Updated : 13 Oct 2017 04:50 PM

நீர்நிலைகளை மீட்க என்ன நடவடிக்கை எடுத்தாலும் நீதிமன்றம் துணை நிற்கும்: 13 மாவட்ட ஆட்சியர்களிடம் நீதிபதி உறுதி

நீர்நிலை முக்கிய ஆதாரம். அவற்றைப் பாதுகாக்க உரிய பொறுப்புடன் செயல்படுங்கள். பல்வேறு ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து நீர் நிலைகளை காக்க வேண்டும். உங்கள் வழக்கமான பணிகளுக்கிடையில் இயற்கையை காக்கவும் நேரம் ஒதுக்குங்கள் என மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

இயற்கை வளம் மற்றும் பெரும்பள்ள ஒடை பாதுகாப்பு நல சங்கத்தின் தலைவர் சண்முகசுந்தரம் தாக்கல் செய்திருந்த மனுவில் நீர் நிலை ஆக்கிரமிப்பை அகற்றாத தர்மபுரி, கன்னியாகுமரி, நாகை, தஞ்சாவூர், நீலகிரி, திருநெல்வேலி, திருவாரூர், விழுப்புரம், கரூர், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி உள்ளிட்ட 13 மாவட்ட ஆட்சியர்களை நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த செப்.21 அன்று நீதிபதிகள் ஹுலுவாடி ஜி ரமேஷ், ஆர்.எம்.ட்டி.டிக்காராமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

ஆனால் 13 மாவட்ட ஆட்சியர்களும் ஆஜராகவில்லை. அப்போது அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக விலக்களிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், ஆஜராக விலக்கு கோருவதற்கு இது வழக்கமான வழக்கில்லை என்றும், இயற்கை வளங்களை பாதுகாப்பது தொடர்பான இந்த வழக்கில் ஆட்சியர்கள் ஆஜராகாமல் இருப்பதற்கு வேதனை தெரிவித்த நீதிபதிகள், இன்று ஒருநாள் மட்டும் விலக்கு அளிக்கப்படுவதாகவும், ஆனால் அறிக்கை தாக்கல் செய்யாதது குறித்து அக்டோபர் 12ல் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.

நேற்று இந்த வழக்கு விசாரணையில் 13 மாவட்ட ஆட்சியர்களும் ஆஜரானார்கள். அவர்களிடம் பேசிய நீதிபதிகள் நீராதாரங்களை பாதுகாப்பது குறித்து ஆட்சியர்களுக்கு முக்கிய அறிவுரைகளை வழங்கினார்கள்.

நீர்நிலை முக்கிய ஆதாரம். அவற்றை பாதுகாக்க உரிய பொறுப்புடன் செயல்படுங்கள். பல்வேறு ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து நீர் நிலைகளை காக்க வேண்டும். உங்கள் வழக்கமான பணிகளுக்கிடையே இயற்கையைக் காக்கவும் நேரம் ஒதுக்குங்கள் என்றனர்.

ஆக்கிரமிப்பை அகற்ற உரிய நோட்டீஸ் கொடுங்கள். பின் விளக்கம் பெறுங்கள். தேவைப்பட்டால் உரிய நடவடிக்கையை கருணை காட்டாமல் எடுங்கள். அந்த நேரத்தில் உங்களுக்குத் தேவையான உதவியை செய்ய நாங்கள் தயார் என்றனர்.

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற ஏதும் இடையூறு இருந்தால் எங்களிடம் தெரிவியுங்கள். அதனால்தான் இந்த வழக்குக்களை கீழமை நீதிமன்றங்கள் ஏதும் விசாரிக்கக் கூடாது என கடந்த முறை உத்தரவிட்டுள்ளோம் என்றனர்.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர்கள் இனிமேல் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்து வழக்கை நவம்பர் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

முன்னதாக தமிழகம் முழுவதும் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பாளர்களுக்கு உரிய நோட்டீஸ் அனுப்பி, கால அவகாசம் வழங்கி அகற்ற வேண்டும். மறுப்பவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யலாம். ஆக்கிரமிப்பாளர்கள் மீதான நடவடிக்கையை எதிர்த்து கீழமை நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தால் அவற்றை அந்த நீதிமன்றங்கள் விசாரணைக்கு ஏற்க கூடாது.

தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இயற்கையை நாம் பாதுகாத்தால் இயற்கை நம்மை பாதுகாக்கும் என்பதை உணர்ந்து ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும்.

நீர்நிலை மற்றும் அரசு நில ஆக்கிரமிப்பு தொடர்பான விவகாரத்தில் நீதிமன்றத்தின் உத்தரவுகள் மட்டும் போதாது. அனைத்து மக்களும் இணைந்து பணியாற்றினால்தான் மனித இனத்தையும், பிற உயிரினங்களையும் காப்பாற்ற முடியும்.

தண்ணீர் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அனைவரும் பொறுப்புணர்ந்து செயல்பட்டால்தான் நம் முன்னோர்களால் நமது சந்ததியினருக்கு விட்டுச் சென்ற வளங்களை காப்பாற்ற முடியும் என்று கடந்த முறை நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x