Published : 13 Oct 2017 04:01 PM
Last Updated : 13 Oct 2017 04:01 PM

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடப்பதற்குள் பணப் பட்டுவாடா வழக்கில் முதல்வர் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை தேவை: ஸ்டாலின்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நிறுத்தப்படக் காரணமான 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா செய்த வழக்கில் முதல்வர் உள்ளிட்டவர்கள் மீது மீண்டும் தேர்தல் நடப்பதற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''டெங்குவை கட்டுப்படுத்த மத்தியக் குழு வந்திருப்பதை உள்ளபடியே வரவேற்கிறோம். அதே நேரத்தில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, அதே டெல்லியில் இருந்து எய்ம்ஸ் மருத்துவக்குழு ஒன்று வந்திருந்தது. ஆனால், உண்மையில் நடந்தது என்ன என்ற உண்மையை அந்தக் குழு நாட்டு மக்களுக்கு இதுவரை வெளிப்படுத்தவில்லை. எனவே, டெல்லியில் இருந்து வந்துள்ள குழு டெங்கு குறித்த உண்மையான விவரங்களை எடுத்துச் சொல்ல வேண்டும், டெங்குவை முழுமையாக கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை.

உள்ளாட்சித் தேர்தலுக்கும், டெங்கு பரவுவதற்கும் எந்தத் தொடர்புமில்லை என்று ஓபிஎஸ் நேற்று கூறியிருக்கிறார். அவர் எப்போதுமே முன்பின் சம்பந்தமே இல்லாமல் பேசிக் கொண்டிருப்பவர். முதலில் தர்ம யுத்தம் நடத்தி, அதன் பிறகு பதவி யுத்தம் நடத்தி, அதன் பிறகு பஞ்சாயத்து நடத்தி, அந்தப் பஞ்சாயத்தில் வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பதற்காக டெல்லுக்குச் சென்று வந்திருக்கிறார். டெல்லிக்கு சென்றபோது கூட மின் துறை அமைச்சரை தவிர்த்து விட்டு, தன்னுடைய அணியைச் சேர்ந்த மைத்ரேயன் எம்.பி., மனோஜ் பாண்டியன் ஆகியோரை உடன் அழைத்துக் கொண்டு சென்று பிரதமரிடம் பேசியிருக்கிறார். அவர்கள் என்ன பேசினார்கள் என்பது உங்களுக்கே நன்றாகத் தெரிந்திருக்கும் என கருதுகிறேன்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேமுதிக அந்தத் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. விஜயகாந்த் கொள்கையில் கொள்கையில் நான் குறுக்கிட விரும்பவில்லை. திமுகவைப் பொறுத்தவரையில் எந்த நேரத்திலும், ஏன் நாளைய தினமே ஆர்.கே.நகரில் தேர்தல் நடத்தினாலும், சந்திக்க தயாராக இருக்கிறோம். ஆனால், நான் கேட்க விரும்புவது என்னவென்றால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நிறுத்தப்பட்ட காரணம் என்ன? 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதை வருமான வரித்துறையே கண்டுபிடித்து, அதனால் தேர்தலை தேர்தல் ஆணையம் நிறுத்தி, தள்ளி வைத்த விவரம் நாட்டுக்கே நன்றாக தெரியும்.

அந்தச் சோதனையின் போது, 89 கோடி ரூபாய் விநியோகம் செய்தவர்களின் பட்டியலில் முதல் பெயர் யாரென்றால், தமிழ்நாட்டின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென்று வருமான வரித்துறையே பரிந்துரை செய்தும், இதுவரையிலும் வழக்குப் பதிவு செய்யவில்லை. அவரேதான் இப்போதும் முதல்வராக இருக்கிறார். இந்த நிலையில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள். எனவே, முதலில் அந்த வழக்கில் உரிய நடவடிக்கையை முதலில் எடுக்க வேண்டும் என்பது தான் எங்களுடைய கோரிக்கை.

டெங்குவினால் இறந்தவர்களின் பட்டியலை எதிர்க்கட்சித் தலைவர் வெளியிடத் தயாரா என்று அமைச்சர் சரோஜா கேட்டிருக்கிறார். சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா டெங்கு காய்ச்சலே கிடையாது, ராசிபுரத்தில் இறந்த 11 மாத குழந்தை டெங்கு காய்ச்சலால் இறக்கவில்லை, சாதாரணக் காய்ச்சலால் இறந்தது என்று சொல்லியிருக்கிறார். என்னிடத்தில் உரிய ஆதாரம் இருக்கிறது. சேலத்தில் உள்ள ஸ்ரீகோகுலம் என்ற மருத்துவமனையில் சிபி சக்கரவர்த்தி என்பவரின் 11 மாத குழந்தை சிஜ்ஜோ சிலி டெங்கு காய்ச்சலால் இறந்ததாக இறப்புச் சான்றிதழில் தெரிவித்துள்ளார்கள். இந்த ஆதாரம் அமைச்சருக்குப் போதுமானதா? அல்லது அவர் கொஞ்சம் கால அவகாசம் கொடுத்தால், எந்தெந்த மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று அறிந்து கொள்ள, நானே அவரை நேரில் அழைத்துச் சென்று காட்டவும் தயாராக இருக்கிறேன். அவர் வருவதற்குத் தயாரா?'' என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x