Last Updated : 13 Oct, 2017 03:34 PM

 

Published : 13 Oct 2017 03:34 PM
Last Updated : 13 Oct 2017 03:34 PM

மத்திய அரசு வழக்கறிஞர்களாக திமுக, காங்கிரஸார் நியமனம்: பாஜக வழக்கறிஞர்கள் கடும் அதிருப்தி

மத்திய அரசு வழக்கறிஞர்களாக திமுக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் நியமனம் செய்யப்பட்டிருப்பதும், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்கள் மத்திய அரசு வழக்கறிஞர்கள் பதவியில் தொடர்வதும் பாஜக வழக்கறிஞர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய அரசு சார்பில் கலால், சுங்கம், சேவை, ஜிஎஸ்டி ஆகிய வழக்குகள் சார்பில் ஆஜராக வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பொறுப்புகளில் திமுக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக பாஜக வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது மத்திய அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டவர்கள் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகும் பதவியில் தொடர்ந்தனர். இந்த விஷயம் மத்திய சட்ட அமைச்சராக சதானந்தகவுடா இருந்தபோது அவர் கவனத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டது. இதையடுத்து மத்திய அரசு வழக்கறிஞர்களாக இருந்த திமுக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மத்திய அரசு வழக்கறிஞர்களாக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து உயர் நீதிமன்ற கிளை பாஜக வழக்கறிஞர் அணி நிர்வாகி ஒருவர் கூறியது:

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்து மூன்றரை ஆண்டுகள் முடிந்துள்ளது. இருப்பினும் மத்திய அரசின் துறைகளின் வழக்கறிஞர்களாக முந்தைய ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்கள் தொடர்வது வேதனையானது. தமிழகத்தில் பாஜக சார்பில் எம்பி, எம்எல்ஏக்கள் வர வேண்டும் என்று தான் மத்திய தலைமையும், மாநிலத் தலைமையும் விரும்புகிறது. அதே நேரத்தில் நீதித் துறையில் பாஜகவினர் இருக்க வேண்டும் என நினைப்பதில்லை. புதிதாக நியமிக்கப்படுபவர்களும் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்களாக இருப்பது துரதிருஷ்டவசமானது.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து மத்திய அரசு வழக்கறிஞர்களாக தங்களை நியமிக்க பாஜக வழக்கறிஞர்கள் தொடர்ந்து விருப்ப மனு அளித்து வருகின்றனர். இருப்பினும் அவர்களது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு, மாற்றுக் கட்சியினரின் கோரிக்கைகள் ஏற்கப்படுகின்றன. பாஜக வளர்ச்சியை விரும்பாதவர்கள் பலர் பாஜகவில் உள்ளனர். இவர்கள் பணத்தை பெற்றுக்கொண்டு மாற்றுக் கட்சியினருக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். இதனால் பாஜக வழக்கறிஞர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x