Published : 13 Oct 2017 09:36 AM
Last Updated : 13 Oct 2017 09:36 AM

காந்தி கொலையை மறைக்கவே தூய்மை இந்தியா திட்டம்: இந்திய கம்யூ. மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு ஆதங்கம்

காந்தி யாரால் கொல்லப்பட்டார் என்பதை மறைப்பதற்காக, அக்.2-ம் தேதி ‘தூய்மை இந்தியா திட்டம்’ கொண்டாடப்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தெரிவித்தார்.

தமிழ்நாடு சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுகள் சமிதியின் மாநிலப் பொதுச்செயலாளர் பி.ஆர்.நடராஜன் எழுதிய ‘சுதந்திரப் போரில் திருப்பூர் தியாகிகள்’ எனும் நூல் வெளியீட்டு விழா, திருப்பூரில் நேற்று நடைபெற்றது. அமைப்பின் பொருளாளர் எஸ்.பத்மநாபன் தலைமை வகித்தார். தி.ரத்தினசபாபதி முன்னிலை வகித்தார். நூல் ஆசிரியர் பி.ஆர்.நடராஜன் வரவேற்றார்.

நூலை வெளியிட்டு ஆர். நல்லகண்ணு பேசியதாவது: அரசியலில் முக்கியமான காலகட்டத்தில் தியாகிகள் குறித்த நூல் வெளியிடப்படுகிறது. பழைய தலைவர்களை நினைவுகூர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. சுதந்திர தின சின்னமாக இருந்த கொடியை ஆங்கிலேயர்களிடம் இருந்து காப்பாற்றியதற்காக, தன் உயிரை நீத்த, குமரன் வாழ்ந்த மண் இது. தியாகிகளின் வாழ்க்கை பாடப் புத்தகங்களில் இடம்பெற வேண்டும். இதேபோல், சிறையில் செக்கு இழுத்தவர் வ.உ.சிதம்பரனார். கொடி காத்தவர் குமரன். இதுபோன்ற பெருமைகள் வேறு எந்த தியாகிக்கும் இல்லை.

சுதந்திரம் பெற்ற 3 மாதங்களில் காந்தி சுடப்பட்டது துரதிர்ஷ்டம். யாரால் அவர் கொல்லப்பட்டார் என்பதை மறைப்பதற்காக, அக்.2-ம் தேதி ‘தூய்மை இந்தியா திட்டம்’ கொண்டாடுகிறார்கள்.

இந்தியாவில் 6 பெரிய மதங்கள், 2,000 சாதிகள், 600 மொழிகள் உள்ளன. நாடு சிதறிவிடக்கூடாது என்றார் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி. பன்மைத்துவத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்து, முஸ்லிம்கள் ஒன்றாக வாழ்ந்தனர். அந்த பன்முகத்தன்மை இன்றைக்கு மறுக்கப்படுகிறது.

நாட்டுக்கு பாடுபட்டவர்களின் வரலாற்றை, பாடப் புத்தகங்களில் கொண்டுவர வேண்டும். மறைந்த தலைவர்களின் வரலாற்றை குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x