Published : 13 Oct 2017 09:33 AM
Last Updated : 13 Oct 2017 09:33 AM

டெங்குவை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது: தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றச்சாட்டு

தமிழக அரசு டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தவறிவிட்டதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. மாவட்டத்தில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலால் 10-க்கும் மேற்பட்டோர் கடந்த ஒரு மாதத்தில் உயிரிழந்ததாக பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்களை தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்த விஜயகாந்த், அவர்களுக்கு ரொட்டி மற்றும் பழங்கள் வழங்கினார்.

இதைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் மற்றும் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

அப்போது செய்தியாளர்களிடம் விஜயகாந்த் தெரிவித்ததாவது: தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக, திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை. ஆங்காங்கு குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகளை அவ்வப்போது தொடர்ந்து அகற்றியிருந்தாலே, டெங்கு காய்ச்சல் வராமல் தடுத்திருக்கலாம்.

டெங்கு காய்ச்சல் காரணமாக இறந்தவர்களைப் பற்றி பொய்யான தகவல்களை கூறிவரும் தமிழக அரசு, டெங்குவை கட்டுப்படுத்த தவறிவிட்டது. இனியாவது, டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை எட்டிக்கூட பார்க்காத சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், நான் வந்து பார்த்ததை அறிந்தால், இனி வந்துவிடுவார் என்று தெரிவித்தார்.

கோவையில் பிரேமலதா புகார்

இதேபோன்று, விஜயகாந்தின் மனைவி பிரேமலதா நேற்று கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாகியுள்ளதால் அனைத்து மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து வருகிறோம். கோவையில் 5 விதமான காய்ச்சல்களால் மக்கள் பாதிக்கப்படுவதாகவும், பெரும்பாலானோர் திருப்பூரைச் சேர்ந்தவர்கள் எனவும் மருத்துவர்கள் கூறினர்.

உள்ளாட்சி அமைப்புகள் இல்லாததால் தமிழகத்தில் சுத்தம், சுகாதாரம் சீர்கெட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்பு இல்லாமலேயே அரசு சிறப்பாக செயல்பட்டால் ஏன் டெங்கு இவ்வளவு பெரிய பிரச்சினையாக இருக்கிறது.

சுகாதாரத்துறை அமைச்சரின் ஊரான புதுக்கோட்டையிலும், முதலமைச்சரின் ஊரான சேலத்திலும்தான் டெங்கு பாதிப்பு அதிகம். டெங்கு பிரச்சினையை பேரிடராக கருதி மத்திய அரசு உதவ வேண்டும். டெங்கு நோயால் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இறந்தும், வெறும் 40 பேரை மட்டுமே அரசு கணக்கு காட்டுகிறது.

ஆட்சியும், அமைச்சர்களும் மர்மமாகவே இருக்கிறார்கள். முதல்வர் ஜெயலலிதாவின் மரணமும் கூட மர்மமாக இருக்கிறது. அதனாலேயே டெங்கு காய்ச்சலையும் மர்மக் காய்ச்சல் எனக் கூறிக் கொண்டிருக்கின்றனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x