Published : 13 Oct 2017 09:30 AM
Last Updated : 13 Oct 2017 09:30 AM

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்கு: அக். 27-க்குள் பதிலளிக்க பேரவை செயலருக்கு உத்தரவு

நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 அதிமுக எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி திமுக கொறடா தொடர்ந்த வழக்கில், அக்டோபர் 27-ம் தேதிக்குள் சட்டப்பேரவைச் செயலர் பதிலளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சட்டப் பேரவை திமுக கொறடா சக்கரபாணி, உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், ‘முதல்வர் கே.பழனிசாமிக்கு ஆதரவாக கடந்த பிப்ரவரி 18-ம் தேதி சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஓ.பன்னீர்செல்வம், ஆறுகுட்டி, சண்முகநாதன், மாணிக்கம், மனோகரன், கே.பாண்டியராஜன், மனோரஞ்சிதம், சரவணன், செம்மலை, சின்னராஜ், ஆர்.நட்ராஜ் ஆகிய 11 பேரும் ஆட்சிக்கு எதிராக வாக்களித்தனர்.

எம்எல்ஏ அருண்குமார் வாக்கெடுப்பை புறக்கணித்தார். கொரடாவின் உத்தரவை மீறிய இவர்களை தகுதி நீக்கம் செய்ய கடந்த மார்ச் மாதமே பேரவைத் தலைவரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி முதல்வர் மீது நம்பிக்கை இல்லை எனக் கூறி ஆளுநரிடம் கடிதம் அளித்த தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் பேரவைத் தலைவர் ஒருதலைபட்சமாகவே செயல்பட்டுள்ளார். எனவே, கடந்த பிப்ரவரி 18-ம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆட்சிக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய பேரவைத் தலைவருக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.

தலைமை வழக்கறிஞர்

பேரவைச் செயலாளர் பதிலளிக்கவும், பேரவைத் தலைவருக்கு நோட்டீஸ் பிறப்பித்தும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த மனு, நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சட்டப்பேரவைச் செயலாளர் சார்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், ‘‘இது தொடர்பாக பதிலளிக்க நவம்பர் 2-ம் தேதி வரை கூடுதல் அவகாசம் தேவை’’ என கோரினார்.

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களின் தரப்பிலும் பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டது. அதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபில், ஆட்சேபம் தெரிவித்தார். அதையடுத்து நீதிபதி, இதுதொடர்பாக பேரவைத் தலைவர் மற்றும் செயலாளருக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பவும், பேரவைச் செயலாளர் 27-க்குள் பதில் மனுவை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x