Published : 13 Oct 2017 09:25 AM
Last Updated : 13 Oct 2017 09:25 AM

ஊதிய உயர்வு வழங்கியதற்காக முதல்வருக்கு அரசு ஊழியர், ஆசிரியர் அமைப்புகள் நன்றி: 21 மாத நிலுவைத் தொகையை வழங்க கோரிக்கை

ஊதிய உயர்வு அளித்ததற்காக அரசு ஊழியர், ஆசிரியர் அமைப்புகள் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளன. 21 மாத நிலுவைத் தொகையை வழங்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளன.

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஊதிய உயர்வு அக்டோபர் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் நன்றி தெரிவித்துள்ளனர். அவர்கள் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் பி.கே.இளமாறன், முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு: மத்திய அரசின் 7-வது ஊதியக்குழு பரிந்துரையை தமிழக அரசு ஊழியர்களுக்கும் பரிந்துரை செய்து ஊதிய உயர்வு வழங்கியதற்கு முதல்வருக்கு நன்றி. எனினும், மத்திய அரசு ஊழியர்கள் 1.1.2016 முதல் ஊதிய உயர்வு பெற்று வரும் நிலையில், தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 21 மாதங்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படாதது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. இதுவரை அமைக்கப்பட்ட 7 ஊதியக்குழுவிலும் நிலுவைத் தொகை வழங்கப்பட்ட நிலையில், இந்த முறை மட்டும் நிலுவைத் தொகை வழங்காதது ஏமாற்றம் அளிக்கிறது. எனவே, அரசின் நிதிநிலையைக் கருத்தில் கொண்டு, 21 மாதங்களுக்கான நிலுவைத் தொகையை 3 தவணைகளில் வழங்க வேண்டும்.

தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் கூட்டமைப்பின் (டேக்டோ) மாநில ஒருங்கிணைப்பாளர் பா.ஆரோக்கியதாஸ்: மத்திய அரசு ஊதிய உயர்வு வழங்கிய அதேமுறையில் தமிழக அரசு ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்கியதற்காக முதல்வருக்கு நன்றி. பணிக்கொடையை (கிராஜுவிட்டி) ரூ.20 லட்சமாக உயர்த்தி வழங்கவும், வீட்டு வாடகைப்படி, இதர படிகளை இதற்கு முன் இல்லாத அளவுக்கு உயர்த்தி வழங்கியதற்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

தமிழ்நாடு அடிப்படை பணியாளர்கள் சங்க மாநில தலைவர் கே.கணேசன்: மத்திய அரசு போன்று ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.18,000-ஆக மாற்றியமைக்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெறுவோருக்கு காலமுறை ஊதியமும், தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறுவோருக்கு சிறப்பு காலமுறை ஊதியமும் வழங்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x