Published : 13 Oct 2017 09:23 AM
Last Updated : 13 Oct 2017 09:23 AM

டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் குறித்து தமிழகத்தில் மத்திய குழுவினர் இன்று ஆய்வு நடத்துகின்றனர்: டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த பிறகு துணை முதல்வர் ஓபிஎஸ் தகவல்

பிரதமர் அறிவுறுத்தலின்பேரில், மத்திய மருத்துவக் குழுவினர் இன்று தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்புகளை ஆய்வு செய்ய இருப்பதாக டெல்லியில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கே.பி.முனுசாமி, வி.மைத்ரேயன் , மனோஜ் பாண்டியன் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு டெல்லி சென்றனர். நேற்று காலை 11 மணிக்கு அவர்கள் பிரதமர் மோடியைச் சந்தித்தனர். துணை முதல்வராகியுள்ள ஓபிஎஸ்-க்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். அப்போது, முதல்வர் கே.பழனிசாமி அளித்த மனு ஒன்றை, பிரதமரிடம் ஓபிஎஸ் அளித்தார். தொடர்ந்து, தமிழக அரசியல் நிலவரம், டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளிட்டவை குறித்தும் பிரதமரிடம் ஓபிஎஸ் பேசினார்.

இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் கூறும்போது, ‘‘முதல்வர் பழனிசாமியின் கோரிக்கை மனுவை பிரதமரிடம் அளித்தேன். ஆண்டு முழுவதும் தமிழக மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரியை வழங்குமாறு கேட்டேன். உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்’’ என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

முதல்வர் பழனிசாமியுடன் உங்களுக்கு மன வருத்தம் இருப்பதாக கூறப்படுகிறதே?

தமிழக அரசியல் நிலையை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். எம்ஜிஆர் தொடங்கிய, ஜெயலலிதாவால் வழிநடத்தப்பட்ட இந்த இயக்கத்தைக் காக்க நாங்கள் இருவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறோம். எங்களுக்குள் கருத்து வேறுபாடும் இல்லை; மன வருத்தமும் இல்லை.

கட்சிக்குள் உங்களுக்கு உரிய மதிப்பு அளிக்கப்படவில்லை என்ற மன வருத்தத்துடன் இருப்பதாக பேசப்படுகிறதே?

கடந்த 45 ஆண்டுகளாக கட்சியை வளர்க்க இரு தலைவர்களும் பாடுபட்டனர். இந்த ஆட்சி சிறப்பாக நடந்து வருகிறது. எம்ஜிஆர் காலத்திலும், ஜெயலலிதா காலத்திலும் நானும், முதல்வர் பழனிசாமியும் எப்படி இருந்தோமோ, அப்படியேதான் இன்னும் இருக்கிறோம். அதிமுகவில் இனி எந்த காலத்திலும் பிரிவு இருக்காது.

தினகரன் வந்தால் இணைத்துக்கொள்வீர்களா?

கட்சியில் கீழ்நிலையில் இருந்து உழைத்து வருபவர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும்.

இரு அணிகள் பிரிந்திருந்தபோது நீங்கள் விதித்த நிபந்தனைகள் ஏற்கப்பட்டுவிட்டதா?

நிபந்தனைகள் ஏதுமின்றிதான் இணைந்தோம்.

டெங்கு குறித்து பிரதமரிடம் பேசினீர்களா?

டெங்கு காய்ச்சல் தொடர்பாக தமிழகத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பிரதமரிடம் எடுத்துரைத்தேன். அவரும், மத்திய அரசு மருத்துவர் குழுவை அனுப்பி என்ன தேவை என்பதை ஆய்வு செய்யுமாறு கூறியுள்ளார். அந்தக் குழுவினர் 13-ம் தேதி (இன்று) தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வார்கள். இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்தார்.

தமிழக முதல்வர் சார்பாக பிரதமரிடம் ஓபிஎஸ் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழக மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான நிறுவனத்தின் அனல் மின் உற்பத்தி நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரி வழங்க வேண்டும்.

அனைவருக்கும் வீடு திட்டத்தில் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். 14-வது நிதி ஆணையத்தின் பரிந்துரையால் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய வேண்டும். தமிழகத்துக்கு வரவேண்டிய ரூ.17 ஆயிரத்து 60 கோடி நிதியை வழங்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழுவை அமைக்க வேண்டும்.

பாக்ஜல சந்தியில் தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக மீன்பிடிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 11 கோரிக்கைகள் அதில் இடம்பெற்றுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x