Published : 13 Oct 2017 09:18 AM
Last Updated : 13 Oct 2017 09:18 AM

டெங்கு: அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக மருத்துவர், செவிலியர்கள் நியமனம்

டெங்கு காய்ச்சலை கட்டுப் படுத்துவது தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் கே.பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அரசு மருத்துவமனைகளில் தேவைக்கேற்ப கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்களை பணியமர்த்த முடிவு செய்யப் பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டம், முதல்வர் கே.பழனிசாமி தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. இதில் அமைச்சர்கள், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், அனைத்து துறைகளின் செயலர்கள், இயக்குநர்கள், சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.

அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தலைமையிலும் சென்னையில் மாநகராட்சி ஆணையர் தலைமையிலும் அடுத்த 15 நாட்களுக்கு அனைத்து பகுதிகளிலும் டெங்கு கொசு உற்பத்தியாக வாய்ப்புள்ள நீர் தேங்குமிடங்கள், குப்பைக் கூளங்கள், கட்டுமான பகுதிகளை முழுமையாக சுத்தப்படுத்த வேண்டும்.

இப்பணிகளை வட்டம், வட்டார அளவில் கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்க வேண்டும். குழு உறுப்பினர்கள் தினமும் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் இந்த நடவடிக்கைகள் முழுமையாக நடப்பதை கண்காணித்து, ஆட்சியருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.

இப்பணிகளை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையி்ல் மாவட்ட அளவிலான குழு அமைக்க வேண்டும். அனைத்து இடங்களிலும் கூடுதல் துப்புரவு பணியாளர்கள், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்படுவர். பள்ளிகள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் அலுவலக வளாகங்கள், கட்டுமானப் பணிகள் நடக்கும் இடங்கள், குடிசைப் பகுதிகளில் இப்பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.

சுத்தம் செய்யப்படாத இடங்கள், டெங்கு நோயை உருவாக்கும் கொசுக்கள், புழுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டால், அந்த இடத்தின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தேவைப்படும் அனைத்து மருத்துவமனைகளிலும் கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்களை பணியமர்த்தவும் முடிவு செய்யப்பட்டது.

மேலும், இப்பணிகளை ஒருங்கிணைக்க மாவட்டந்தோறும் நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள், உடனடியாக அந்த மாவட்டங்களுக்கு சென்று நடவடிக்கை எடுக்கவும் முதல்வர் அறிவுறுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x