Published : 13 Oct 2017 09:12 AM
Last Updated : 13 Oct 2017 09:12 AM

பள்ளிக்கல்வி துறை சார்பில் ரூ.173 கோடியில் புதிய கட்டிடங்கள்: முதல்வர் கே.பழனிசாமி திறந்து வைத்தார்

பள்ளிக்கல்வித் துறை சார்பில், ரூ.173 கோடியில் கட்டப்பட்ட கட்டிடங்களை முதல்வர் கே.பழனிசாமி திறந்து வைத்தார். மேலும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு சிறப்பாக செயல்பட்ட மாவட்ட ஆட்சியர்கள், நிறுவனங்களுக்கு பசுமை விருதுகளையும் வழங்கினார்.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பள்ளிக்கல்வித் துறை சார்பில் நபார்டு கடனுதவியின் கீழ், நெல்லை மாவட்டம் ஏர்வாடி, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ரூ.2 கோடியே 29 லட்சத்து 76 ஆயிரம் மதிப்பில் 16 வகுப்பறை மற்றம் ஆய்வக கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இது தவிர, அரியலூர், கோவை, திண்டுக்கல், காஞ்சிபுரம், மதுரை, நாகை, நீலகிரி, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, நெல்லை, திருச்சி, வேலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 39 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.54 கோடியே 75 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் வகுப்பறை, ஆய்வகம், குடிநீர், கழிவுநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

நூலக கட்டிடம்

அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டத்தில் கோவை, திருப்பூர், காஞ்சி, மதுரை, நாகை, நீலகிரி, பெரம்பலூர், ராமநாதபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் 68 உயர்நிலைப் பள்ளிகளில் ரூ.115 கோடியே 17 லட்சத்து 79 ஆயிரம் மதிப்பில் பள்ளிக்கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதுதவிர, அனைவருக்கும் கல்வித்திட்டத்தில் விழுப்புரம்- ஏ.குமாரமங்கலத்தில் ரூ.1 கோடியே 5 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள், பொது நூலக இயக்ககத்தில் மதுரை - மேலூரில் ரூ.56 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நூலக கட்டிடம் என ரூ.173 கோடியே 84 லட்சத்து 85 ஆயிரத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர் கே.பழனிசாமி திறந்து வைத்தார்.

பசுமை விருதுகள்

மாவட்டங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக சிறப்பாக பணியாற்றியதற்காக மாவட்ட ஆட்சியர்களுக்கு 2014,15 மற்றும் 16-ம் ஆண்டுக்கான பசுமை விருதுகளை முதல்வர் கே.பழனிசாமி வழங்கினார். இதன்படி, 2014-ம் ஆண்டுக்கு, தர்மபுரி- கே.விவேகானந்தன், தேனி- கே.எஸ்.பழனிசாமி (முன்னாள்), கோவை- அர்ச்சனா பட்நாயக் (முன்னாள்) ஆகியோருக்கு விருதுகள் வழங்கினார்.

தொடர்ந்து, 2015-ம் ஆண்டுக்கு ஈரோடு- சு.பிரபாகர், நீலகிரி- பொ.சங்கர் (முன்னாள்), கரூர்- ச.ஜெயந்தி (முன்னாள்) மற்றும் 2016-ம் ஆண்டுக்கு, நாமக்கல்- மு.ஆசியா மரியம், தேனி- ந.வெங்கடாசலம், திருவண்ணாமலை -அ.ஞானசேகரன் (முன்னாள்) ஆகியாருக்கு முதல்வர் கே.பழனிசாமி பசுமை விருதுகளை வழங்கினார்.

நிறுவனங்களுக்கு விருது

மேலும், மாசு தடுப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்து விளங்கிய தொழில் நிறுவனங்களுக்கான விருதை, 2015-ம் ஆண்டுக்கு தி ராம்கோ சிமென்ட்ஸ், கூடங்குளம் அணுமின் நிலையம், மிசெலின் இந்தியா , லேன்கோ தஞ்சாவூர் பவர் கம்பெனி ஆகிய நிறுவனங்கள் பெற்றன. 2016-ம் ஆண்டுக்கு கோஸ்டல் எனர்ஜன், ஹூண்டாய் மோட்டார்ஸ், டால்மியாசிமென்ட் நிறுவனங்களுக்கும் விருதுகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகளில், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், வி.எம்.ராஜலட்சுமி, தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், செயலர்கள் பிரதீப் யாதவ், நசிமுத்தின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x