Published : 13 Oct 2017 09:10 AM
Last Updated : 13 Oct 2017 09:10 AM

ஏடிஎம் கார்டில் பணம் எடுக்க முடியாததால் காஞ்சி கோயிலில் பிச்சை எடுத்த ரஷ்ய இளைஞர் திடீர் மாயம்

ஏடிஎம் கார்டு முடங்கியதால் பணத்துக்காக காஞ்சிபுரம் கோயிலில் பிச்சை எடுத்த ரஷ்ய இளைஞர் மாயமானார்.

ரஷ்யாவைச் சேர்ந்தவர் இவான்ஜலின் பெர்ன்கோவ் (24), இந்தியாவில் உள்ள கோயில்களை பார்வையிடுவதற்காக கடந்த செப்டம்பர் 8-ம் தேதி வந்துள்ளார். கடந்த 24-ம் தேதி தமிழகம் வந்த பெர்ன்கோவ், காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்களை பார்க்க விரும்பினார். இதற்காக கடந்த 9-ம் தேதி காஞ்சிபுரம் வந்தார்.

செலவுக்கு பணம் இல்லாததால் என்ன செய்வதென்று தெரியாமல் குமரகோட்டம் முருகன் கோயிலில் படுத்து தூங்கிவிட்டார். காலையில் கோயிலில் சிலர் பிச்சை எடுப்பதை பார்த்த அவர், செலவுக்கு பணம் இல்லாததால் அங்கேயே உட்கார்ந்து பிச்சை எடுத்துள்ளார்.

இதையடுத்து சிவகாஞ்சி காவல் உதவி ஆய்வாளர் துளசி, அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினார். அவரிடம் பாஸ்போர்ட், விசா போன்றவை முறைப்படி இருந்ததால் செலவுக்கு ரூ.500 கொடுத்து, சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள ரஷ்ய தூதரகத்துக்கு செல்லுமாறு கூறியுள்ளார். பிறகு, காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை வரும் ரயிலில் ஏற்றி அனுப்பியுள்ளார். இது குறித்த செய்தி ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பரவியது. இதைப் பார்த்த வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், அந்த இளைஞருக்கு உதவ முன்வந்தார்.

ஆனால், நேற்று முன்தினம் இரவே சென்னை வந்திருக்க வேண்டிய பெர்ன்கோவ், நேற்று இரவு வரை தூதரகத்துக்கு வரவே இல்லை. அவர் எங்கு சென்றார், எங்கிருக்கிறார் என்ற தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சென்னையில் உள்ள ரஷ்ய தூதரக அதிகாரிகள் போலீஸில் தகவல் அளித்துள்ளனர். அதனடிப்படையில் சென்னை, காஞ்சிபுரம் போலீஸார் 2 தனிப்படைகள் அமைத்து மாயமான ரஷ்ய இளைஞரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x