Published : 13 Oct 2017 09:06 AM
Last Updated : 13 Oct 2017 09:06 AM

85 கோடியில் கட்டப்பட்ட கட்டிடங்கள் திறப்பு: அரசு துறை ஆவணங்களின் தொகுப்புக்கான தகவலாற்றுப்படை இணையதளம் - முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

தமிழ் இணையக் கல்விக்கழகத்தால் அரசுத்துறைகளை ஆவணப்படுத்தியதன் தொகுப்பு இணையதளமான தகவலாற்றுப்படை மற்றும் தமிழ்மின் நூலக இணையதளத்தை முதல்வர் கே.பழனிசாமி தொடங்கி வைத்தார். மேலும் ரூ.85 கோடியில் கட்டப்பட்ட கட்டிடங்களையும் திறந்து வைத்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தொலை நோக்குத்திட்ட அறிக்கை 2023-ல் குறிப்பிட்டபடி, சென்னை மற்றும் 2-ம் நிலை நகரங்களான கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, ஒசூர் ஆகிய இடங்களில் 8 தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த சிறப்பு பொருளாதார மண்டலங்களை (எல்கோசெஸ்கள்) தமிழ்நாடு மின்னணு நிறுவனம் நிறுவியுள்ளது.

மாநில தரவு மையத்தின் பரிமாற்ற தரவுகளை பாதுகாக்கவும், தங்குதடையற்ற தொடர் சேவைகள் வழங்கவும் திருச்சி, நவல்பட்டில் அமைந்துள்ள எல்கோசெஸ் நிர்வாக மற்றும் தொழில்நுட்ப கட்டிடத்தில் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் சார்பில் ரூ.59 கோடியே 85 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள மாநில தரவு மையத்துக்கான பேரிடர் மீட்பு மையம், ரூ.1 கோடியே 73 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள கலந்தாய்வுக் கூடம் உள்ளிட்டவற்றை முதல்வர் கே.பழனிசாமி திறந்து வைத்தார்.

மேலும், கிருஷ்ணகிரி - ஓசூரில் ரூ.21 கோடியில் கட்டப்பட்ட நிர்வாக, தொழில்நுட்ப கட்டிடம், நெல்லை- கங்கைகொண்டானில் ரூ.1 கோடியே 50 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், மதுரை - இலந்தைகுளத்தில் தகவல் தொழில்நுட்ப கட்டிடத்தில் ரூ.1 கோடியே 70 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள கலந்தாய்வுக்கூடம் என ரூ.85 கோடியே 78 லட்சம் மதிப்பு கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார்.

மேலும், ரூ.12 லட்சத்து 26 ஆயிரத்தில் மேம்படுத்தப்பட்ட தமிழ் இணைய கல்விக்கழகத்தின் ‘www.tamilvu.org’ என்ற இணையதளத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். இதில் பொதுமக்கள், மாணவர்கள், தமிழ் ஆய்வாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பயன்பெறும் வகையில் கல்வித்திட்டங்கள், நூலகம், கணினித்தமிழ், ஆய்வு உள்ளிட்ட விவரங்கள் கிடைக்கும். மேலும், தமிழ் இணைய கல்விக்கழகத்தால் ரூ.59 லட்சத்தில் உருவாக்கப்பட்டுள்ள ‘தமிழிணையம் மென்பொருள் தொகுப்பு-2’ ஐயும் முதல்வர் தொடங்கி வைத்தார்.

இது தவிர, தமி்ழக அரசின் பிற துறைகளில் ஆவணப்படுத்தியவற்றை சேகரித்து, முதல்கட்டமாக ரூ.20 லட்சத்தில் உருவாக்கப்பட்டுள்ள தகவலாற்றுப்படை எனும் இணையதளம், ரூ.1 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ் மின் நூலகம் என்ற இணையதளத்தையும் முதல்வர் தொடங்கி வைத்தார். மேலும், தமிழ்நாடு மின்னாளுமை முகமையால் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாதம் இரு முறை வெளிவர உள்ள இ-மடல் என்ற இதழையும் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் வெல்லமண்டி என்.நடராஜன், எம்.மணிகண்டன், எஸ்.வளர்மதி, தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், தகவல் தொழில்நுட்பவியல் செயலர் தா.கி.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x