Published : 13 Oct 2017 08:58 AM
Last Updated : 13 Oct 2017 08:58 AM

ஷெனாய் நகர் அருகே வீடுகளில் ஏற்பட்ட விரிசலுக்கு மெட்ரோ ரயில் காரணமா? - ஐஐடி வல்லுநர்கள் ஆய்வு

ஷெனாய் நகர் அருகே திரு.வி.க.காலனியில் உள்ள சில வீடுகளில் விரிசல் ஏற்பட்டதற்கு மெட்ரோ ரயில் காரணமா என்பது குறித்து ஐஐடி வல்லுநர்கள் குழு ஆய்வு செய்து வருகிறார்கள்.

சென்னையில் திருமங்கலம் - நேரு பூங்கா இடையே சுரங்கப்பாதையில் கடந்த மே மாதம் 14-ம் தேதி மெட்ரோ ரயில் தொடங்கப்பட்டது. இந்த சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில்கள் செல்லும்போது திரு.வி.க.காலனியில் உள்ள பழமையான குடியிருப்பு பகுதிகளில் அதிர்வு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து வந்தனர். முன்னதாக மெட்ரோ சுரங்கப்பாதை பணியின்போது 4 வருடங்களுக்கு முன்பு இதே இடத்தில் சில வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. பின்னர் மெட்ரோ ரயில் அதிகாரிகள் அதனை சரி செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மீண்டும் அப்பகுதியில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. இது அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, சென்னை ஐஐடியில் இருந்து வல்லுநர்கள் குழுவினர் வந்து ஆய்வுகளை மேற்கொண்டனர். வீடுகளில் விரிசல் ஏற்பட்டதற்கு மெட்ரோ ரயில் இயக்கம் காரணமா? அல்லது பழமையான கட்டிடங்கள் என்பதால் அவற்றில் விரிசல் ஏற்பட்டதா என்ற கோணத்தில் அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

நிரந்தர தீர்வு வேண்டும்

இது தொடர்பாக திரு.வி.க.காலனி குடியிருப்பு நலச்சங்கத்தின் செயலாளர் சி.செந்தில்நாதன் ‘தி இந்து’விடம் கூறும்போது, “இந்த பகுதியில் சுமார் 28 குடியிருப்புகள் உள்ளன. 40 ஆண்டுகள் பழமையானதாக இருந்தாலும், அவை முழு உறுதித்தன்மையுடன் இருக்கின்றன. சமீபத்தில்தான் பல வீடுகள் புனரமைக்கப்பட்டன. இந்த பகுதியின் கீழேயே மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பெரிய அளவில் இருக்கிறது. இதனால், அதன் மேலே இருக்கும் வீடுகளில் அடிக்கடி விரிசல் ஏற்படுகிறது. தற்போது, பெரும்பாலான வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. சில வீடுகளில் மழைநீர் உள்ளே கொட்டும் அளவுக்கு பெரிய விரிசல்கள் உள்ளன. இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு பலமுறை புகார் அளித்தும் நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை. மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில் எந்த வித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் நிரந்தர தீர்வு வேண்டும். விரிசல் அடைந்துள்ள வீடுகளை புனரமைத்து தர வேண்டும்’’ என்றார்.

இதுபற்றி மெட்ரோ ரயில் அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, “வீடுகளில் ஏற்பட்டுள்ள விரிசல் குறித்து ஐஐடி வல்லுநர்கள் குழு நேரில் சென்று ஆய்வு நடத்தியது. விரிசலுக்கான காரணம் குறித்து ஐஐடி வல்லுநர்கள் குழுவின் ஆய்வு அறிக்கை மூலம் தெரியவரும். விரிசலுக்கு மெட்ரோ ரயில் இயக்கம்தான் காரணம் என்று உறுதியானால், இதற்கான இழப்பீடுகளை நிர்வாகம் அளிக்கும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x