Published : 13 Oct 2017 08:57 AM
Last Updated : 13 Oct 2017 08:57 AM

ஜார்ஜ் டவுன், புரசை, திருவல்லிக்கேணியை மறுசீரமைக்க சிஎம்டிஏ முடிவு: ஆய்வு மேற்கொள்ள தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு

கட்டிடங்கள் மிகவும் நெருக்கமாக அமைந்திருக்கும் ஜார்ஜ் டவுன், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம் ஆகிய பகுதிகளை மறுசீரமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள தனியார் நிறுவனங்களுக்கு சிஎம்டிஏ நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

சென்னையின் பழமையான பகுதிகளான ஜார்ஜ் டவுன், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம் ஆகிய பகுதிகள் எந்தவித நகர வடிவமைப்பு திட்டமிடலும் இல்லாமல் காலப்போக்கில் வளர்ந்த பகுதிகளாக உள்ளன. இந்த இடங்களில் தற்போதைய கட்டிட விதிமுறைகளை மீறிய நிலையில் ஏராளமான கட்டிடங்கள் அமைந்துள்ளன. குறிப்பாக சாலைகள் குறுகலாக உள்ளன. ஜார்ஜ் டவுன் பகுதியில் மட்டும் சுமார் 98 சதவீதத்துக்கு மேற்பட்ட கட்டிடங்கள் விதிகளை மீறியதாக கணக்கெடுப்பில் தெரியவந்தது.

இந்த விதி மீறல்களை சரிசெய்ய முடியாமல் சிஎம்டிஏ திணறி வந்தது. அதேவேளையில் இந்த பகுதியை மறுசீரமைக்க வேண்டிய அழுத்தமும் ஏற்பட்டது. இந்நிலையில், ஜார்ஜ் டவுன், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம் ஆகிய பகுதிகளில் மறுசீரமைப்பு திட்டம் தயாரிக்க தனியார் நிறுவனங்களுக்கு சிஎம்டிஏ அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து சிஎம்டிஏ வெளியிட்டுள்ள டெண்டரில் கூறியிருப்பதாவது:

ஜார்ஜ் டவுன், புரசைவாக்கம், திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகள் அதிக மக்கள்தொகை கொண்டவையாக உள்ளன. பல கட்டிடங்கள் விதிகளை மீறி உள்ளன. இதனால் இந்தப் பகுதிகளில் அகலமான சாலை வசதி, திறந்தவெளி இடங்கள் மற்றும் பிற அடிப்படை கட்டுமான வசதிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த பணிகளை மேற்கொள்வது குறித்தும், அப்பகுதிகளை மறுசீரமைப்பது குறித்தும் ஆய்வு செய்யும் பணியில் தனியார் நிறுவனங்கள் பங்கேற்கலாம். ஆர்வமுள்ள நிறுவனங்கள் பணியை மேற்கொள்ள ஒப்பந்தம் கோரலாம். ஒப்பந்தங்களை நவம்பர் 10-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

இவ்வாறு டெண்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆய்வு செய்ய ஆர்வமுள்ள நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வரும் 24-ம் தேதி சிஎம்டிஏ வளாகத்தில் நடைபெறவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x