Published : 13 Oct 2017 08:52 AM
Last Updated : 13 Oct 2017 08:52 AM

இடிந்து விழும் நிலையில் உள்ள குடியிருப்புகளில் மீண்டும் குடியேறிய இருளர் மக்கள்: உயிர் பலி ஏற்படும் அபாயம்

காஞ்சிபுரம் மாவட்டம், அச்சிறுப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட 4-வது வார்டில் கன்னிக்கோயில் மேடு பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள 21 குடியிருப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்தக் குடியிருப்புகள், பராமரிப்பில் இல்லாததால் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளன. மேலும், கடந்த ஆகஸ்ட் மாதம் கன மழையின்போது ஒரு குடியிருப்பு இடிந்து விழுந்ததில், ஐயம்மாள் என்ற பெண் இடிபாடுகளில் சிக்கி, சம்பவ இடத்திலேயே பலியானார். இதை தொடர்ந்து, இடிந்து விழும் நிலையில் உள்ள மற்ற குடியிருப்புகளில் தங்கியிருந்த இருளர் இன மக்கள் அருகில் உள்ள சமுதாய கூடத்தில் தற்காலிமாக தங்க வைக்கப்பட்டனர்.

இதையடுத்து, ஆபத்தான குடியிருப்பில் வசித்த இருளர் இன மக்களுக்கு மாற்று இடம் ஒதுக்கி தருமாறு மதுராந்தகம் வருவாய்த் துறைக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் பரிந்துரை செய்யப்பட்டது. இந்தப் பரிந்துரையின்பேரில், வேடந்தாங்கல் மற்றும் பெரும்பேர்கண்டிகை ஆகிய கிராமப் பகுதிகளில் நிலம் தேர்வு செய்யும் பணிகளை, வருவாய்த் துறையினர் மேற்கொண்டனர். ஆனால், நாட்கள் பல கடந்தும் மாற்று நிலம் தேர்வு செய்வதில் வருவாய்த் துறையினர் அலட்சிய மாக செயல்படுவதாக இருளர் இன மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். மேலும், தற்காலிகமாக தங்க வைக்கப்பட்ட இடத்தில் அடிப்படை தேவைகள் கூட இல்லாததால், பாதிக்கப்பட்ட இருளர் மக்கள் ஆபத்தான நிலையில் உள்ள குடியிருப்புகளில் மீண்டும் குடியேறியுள்ளனர். இதனால், மீண்டும் உயிர் பலி ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இதுகுறித்து, கன்னிக்கோயில் மேடு இருளர் இன மக்கள் கூறியதாவது: மாற்று இடங்கள் தருவதாக கூறியதாலேயே கன்னிக்கோயில் மேடு பகுதியில் இருந்த குடியிருப்புகளை விட்டு வெளியேறினோம். மேலும், தற்காலிக இடமான சமுதாய கூடத்தில் அடிப்படை தேவைகளான தண்ணீர் மற்றும் கழிவறை போன்றவற்றை பயன்படுத்த முடியவில்லை. மேலும், சமுதாய கூடத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற அனுமதிக்கப்படுவதால், நிகழ்ச்சி முடியும் வரையில் நாங்கள் வெளியில் காத்திருக்க வேண்டியுள்ளது.

மேலும், எங்களுக்காக தேர்வு செய்யப்படும் மாற்று நிலத்தில் பாதிக்கப்பட்ட நாங்களே குடிசை அமைத்துக் கொள்ள வேண்டும் என கூறப்படுகிறது. குடிசை அமைக்கும் அளவுக்கு எங்களுக்கு வசதியிருந்தால், நாங்கள் ஏன் சமுதாய நலக் கூடத்தில் தங்கி கஷ்டப்படுகிறோம்? அதனால், உடனடியாக மாற்று ஏற்பாடு செய்து எங்களுக்கு நிரந்தர தீர்வு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இடிந்து விழும் நிலையில் உள்ள பழைய குடியிருப்புகளிலேயே, மீண்டும் குடியேறி உள்ளோம். இந்த ஆபத்தான நிலையை உணர்ந்தாவது, அரசு தேவையான நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்றனர்.

இதுகுறித்து, மதுராந்தகம் வட்டாட்சியர் கற்பகம் கூறியதாவது: கன்னிக்கோயில் மேடு இருளர் மக்களுக்காக பல இடங்களில் மாற்று நிலம் தேர்வுசெய்தோம். ஆனால், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம் இடம் வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர். அப்பகுதி யில் மாற்று நிலம் இல்லாத போது அவர்களுக்கு எவ்வாறு வழங்க முடியும்? மேலும், அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி அருகில் உத்தமநல்லூரில் நிலம் தேர்வு செய்துள்ளோம். அவர்கள் விருப்பப்பட்டு குடிசைகள் அமைத்தால், பசுமை வீடு திட்டத்தின் கீழ் புதிய குடியிருப்புகளை அமைக்க உள்ளோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x