Published : 13 Oct 2017 08:38 AM
Last Updated : 13 Oct 2017 08:38 AM

ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிச. 31-க்குள் இடைத்தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையர் உறுதி

பணப் பட்டுவாடா உள்ளிட்ட புகார்களால் ரத்து செய்யப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை டிச.31-க்குள் நடத்தி முடிவை அறிவித்துவிடுவோம் என தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவால் காலியான ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால், பணப் பட்டுவாடா புகார்களால் கடைசி நேரத்தில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. உகந்த சூழல் ஏற்படும்போது அங்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இதற்கிடையே, ஆர்.கே.நகர் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்குள் தேர்தலை ஆணையம் நடத்தும் என நம்புவதாக தெரிவித்தது.

இந்நிலையில், டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தப்படாதது குறித்து கேட்டபோது, ‘‘டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆர்.கே.நகரில் இடைத்தேர்தலை நடத்தி முடிவுகளை அறிவித்துவிடுவோம்’’ என தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்தார். நாடு முழுவதும் 10 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால், அதனுடன் இணைத்து ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலும் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து, அந்த தொகுதிகள் காலியாக உள்ளன. இது தொடர்பான தமிழக சட்டப்பேரவை செயலரின் அறிக்கை தேர்தல் ஆணையத்திடம் உள்ளது. ஆனால், தகுதி நீக்கத்தை எதிர்த்து 18 பேரும் தொடர்ந்துள்ள வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதன் மீதான விசாரணை நவம்பர் 3-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முடிவு வந்தால் மட்டுமே, தேர்தல் ஆணையம் அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும்.

இமாச்சல பிரதேசத்தில் நவம்பர் 9-ல் தேர்தல்

மொத்தம் 68 உறுப்பினர்களைக் கொண்ட இமாச்சல பிரதேச சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் ஜனவரி 7-ம் தேதி நிறைவடைகிறது. இதுதொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி, தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத், சுனில் அரோரா டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: இமாச்சல பிரதேச சட்டப்பேரவைக்கு ஒரேகட்டமாக நவம்பர் 9-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. டிசம்பர் 18-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும். யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் விபாட் இயந்திரம் 68 தொகுதிகளிலும் பயன்படுத்தப்படும்.

வரும் 16-ம்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. வரும் 23-ம் தேதிக்குள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும். வேட்புமனுக்களை வாபஸ் பெற 24-ம் தேதி கடைசி நாளாகும். அக்டோபர் 26-ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். இமாச்சல பிரதேசத்தில் இப்போதே தேர்தல் விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

குஜராத் சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் ஜனவரி 22-ம் தேதி நிறைவடைகிறது. அந்த மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையம் நேற்று அறிவிக்கவில்லை. எனினும் டிசம்பர் 18-ம் தேதிக்கு முன்பாக குஜராத் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்தப்படும் என்றும், விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x