Published : 07 Sep 2017 12:04 PM
Last Updated : 07 Sep 2017 12:04 PM

கல்வி உதவித்தொகைகளைக் குறைத்து அடுத்த துரோகத்தை செய்துள்ளது அதிமுக அரசு: ஸ்டாலின் தாக்கு

பொறியியல் மற்றும் மருத்துவக் கல்வி பயிலும் ஆதி திராவிட, பழங்குடியின மற்றும் கிறிஸ்தவ மாணவர்களுக்கு இதுவரை அளிக்கப்பட்டு வந்த போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகைகளை, முன்னறிவிப்பு ஏதுமில்லாமல், திடீரென்று பெருமளவுக் குறைத்து அடுத்த துரோகத்தை செய்துள்ளது 'குதிரை பேர' அரசு என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "பொறியியல் மற்றும் மருத்துவக் கல்வி பயிலும் ஆதி திராவிட, பழங்குடியின மற்றும் கிறிஸ்தவ மாணவர்களுக்கு இதுவரை அளிக்கப்பட்டு வந்த போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகைகளை, முன்னறிவிப்பு ஏதுமில்லாமல், திடீரென்று பெருமளவுக் குறைத்து அரசு ஆணை வெளியிட்டு, ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மைச் சமுதாய மக்களை வஞ்சித்திருக்கும் ‘குதிரை பேர’ அதிமுக அரசுக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சமூகநீதிக் கொள்கை மீது மேலும் ஒரு தாக்குதலைத் தொடுத்திருக்கும் இந்த அரசு, எந்தப்பிரிவு மக்களையும் நிம்மதியாக வாழவிடுவது இல்லை என்று முடிவெடுத்து, அனைவரையும் சங்கடத்திற்குள்ளாக்க கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறது.

அரசு ஒதுக்கீடு மூலம் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துப் படிக்கும் மாணவர்களுக்கு, ஆண்டுக்கு 12.5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகையை 4 லட்சம் ரூபாயாகவும், பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு 85 ஆயிரம் ரூபாய் அளிக்கப்பட்டு வந்ததை, 70 ஆயிரம் ரூபாயாகவும் குறைத்து அநியாயமாகவும், அக்கிரமமாகவும் ஒரு அரசு ஆணையை, ஊழல் மலிந்த ‘குதிரை பேர’ அரசு வெளியிட்டு இருக்கிறது. அநீதியான இந்த அரசு ஆணையின் மூலம் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதிதிராவிட, பழங்குடியின, கிறிஸ்தவ சமுதாயங்களைச் சேர்ந்த மருத்துவ மற்றும் பொறியியல் கல்வி பெறும் மாணவர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு, அவர்களது எதிர்காலம் கேள்விக்குறிக்கு உள்ளாக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

தி.மு.க. ஆதரவளித்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இருந்தபோது, 2010-11ல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ - மாணவியர் மருத்துவர்களாகவும், இன்ஜினியர்களாகவும் ஆக வேண்டும் என்ற சிறந்த நோக்குடன் அளிக்கப்பட்ட கட்டணச்சலுகை பெரும் வரவேற்பைப் பெற்றது. பள்ளி மேல் படிப்பை முடித்த மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் மருத்துவக் கல்வியிலும், பொறியியல் கல்வியிலும் சேர்ந்துப் படிக்கும் பொன்னான வாய்ப்பும் ஏற்பட்டது.

ஆனால், மத்தியில் உள்ள பா.ஜ.க.வின் கைக்கூலியாக இருக்கும் இந்த ‘குதிரை பேர’ எடப்பாடி அரசுக்கு இது பொறுக்கவில்லை. எனவே, திடீரென்று டாக்டர்கள் மற்றும் எஞ்சினியர்கள் ஆகும் மாணவர்களின் எண்ணத்தில் மண்ணை அள்ளிப் போட்டுள்ளது. ‘நீட்’ கொடுமையால் நிகழ்ந்த அரியலூர் மாணவி அனிதா மரணத்தின் ஈரம் கூட இன்னும் காயவில்லை.

அவரது சமாதியின் மீது போடப்பட்ட மலர்கள் இன்னும் காயவில்லை. ஆனால், அதற்குள் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களின் மருத்துவம் மற்றும் பொறியியல் கனவுகளைச் சிதைக்கும் இன்னொரு மோசமான நடவடிக்கையாக ‘கட்டணச் சலுகை குறைப்பு’ நடவடிக்கையை எடுத்து, ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மாணவ மாணவியருக்கு மாபெரும் துரோகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான பெரும்பான்மையிழந்த இந்த ‘குதிரை பேர’ அதிமுக அரசு செய்து முடித்திருக்கிறது.

ஏற்கனவே எரிமலையாய் குமுறிக் கொண்டிருக்கும் மாணவர் சமுதாயத்தின் தவிப்பில் மேலும் எண்ணெய் ஊற்றும் வேலையில், எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு தொடர்ந்து ஈடுபடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான கட்டணக் குறைப்பை உடனடியாக திரும்பப் பெறவில்லை என்றால், தமிழகத்தின் சமூகநீதிக் கொள்கைக்குத் தினமும் ஊனம் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி அரசு விரைவில் மிகமோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கிறேன்"

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x