Last Updated : 22 Mar, 2014 01:23 PM

 

Published : 22 Mar 2014 01:23 PM
Last Updated : 22 Mar 2014 01:23 PM

6 ஆண்டாக குடிநீருக்காக தவிக்கும் தரமணி பகுதி மக்கள் : அதிகாரிகள் மெத்தனம்

தரமணி தந்தை பெரியார் நகரில் காமராஜர் தெரு, கென்னடி தெரு, கருணாநிதி 2வது குறுக்கு தெரு ஆகிய தெருக்களில் 600க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. அந்த வீடுகளுக்கு தனித்தனி குடிநீர் இணைப்புகள் இருந்தன. இந்நிலையில் கருணாநிதி 2வது குறுக்கு தெருவில் அருகில் உள்ள ஏரியிலிருந்து கழிவுநீர் கலந்ததால் 6 ஆண்டுகளுக்கு முன் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதேபோல காமராஜர், கென்னடி தெருக்களில் அருகில் உள்ள நூறடி சாலையில் புதிதாக சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள் ளப்படுவதால் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அது மீண்டும் சரிசெய்யப்படவில்லை.

இந்நிலையில் இந்த தெருக் களில் 20க்கும் குறைவான இடங் களில் பிளாஸ்டிக் தொட்டிகள் வைக்கப்பட்டு 2 நாட்களுக்கு ஒருமுறை சென்னை குடிநீர் வாரியத்தால் தண்ணீர் நிரப்பப் படுகிறது. இந்த தண்ணீர்தான் அங்குள்ள மக்களின் அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்த தண்ணீர் போதுமானதாக இல்லை என்று அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் புகார் தெரிவித்தனர்.

இதுகுறித்து அப்பகுதியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் ஈஸ்வரி கூறுகையில், “தொட்டி நீர் எங்களுக்கு போதவில்லை. ஒரு குடும்பத்துக்கு 5 குடங்கள் தண்ணீர் கிடைப்பதே பெரும் பாடாக இருக்கிறது. பள்ளிக்கு செல்லும் இரு குழந்தைகள் உள்ள என் வீட்டில் குடிப்பது, குளிப்பது, சமையல் என அனைத்து தேவைகளுக்கும் இந்நீரை பயன்படுத்துவதால் தண்ணீர் போதவில்லை” என்றார்.

அதே பகுதியைச் சேர்ந்த மற்றொருவர் கூறுகையில், “உடல்நலம் பாதிக்கப்பட்ட நான் குடங்களை தூக்க முடியாமல் தூக்கி வருகிறேன். பிள்ளைகள் பரீட்சை நேரத்தில் கூட ஒரு மணி நேரம் தண்ணீர் எடுக்க வேண்டியிருக்கிறது” என்றார்.

புவனேஸ்வரி என்பவர் கூறுகையில், “2002-ல் தான் குடிநீர் இணைப்பு தரப்பட்டது. இப்போது அதுவும் இல்லை. குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தேவையான தண்ணீரை குடங்களில் தூக்கிக் கொண்டு செல்ல எங்களால் முடியவில்லை” என்றார்.

இது குறித்து சென்னை குடிநீர் அதிகாரி கூறியதாவது:

காமராஜ் தெரு, கென்னடி தெருவில் பிரதான சாலையில் போடப்பட்டிருக்கும் இணைப்பை மாற்றி குடியிருப்புகளின் அருகிலேயே குடிநீருக்கான பிரதான பைப் போடப்படும். இதிலிருந்து வீடுகளுக்கு தனித்தனி இணைப்புகள் கொடுக்கப்படும். இந்த பணி இன்னும் ஒரு மாதத்தில் முடிவடையும்.

தரமணியில் பொதுவாகவே தண்ணீர் தரம் சற்று குறைவாக உள்ளது. ஒவ்வொரு பகுதியாக குடிநீர் தரத்தை உயர்த்தி வருகிறோம். கருணாநிதி 2வது குறுக்கு தெருவிலும் பிரச்சினை எங்குள்ளது என்று கண்டறிந்து, பதினைந்து நாட்களில் சரி செய்வோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x