Published : 26 Jan 2015 01:38 PM
Last Updated : 26 Jan 2015 01:38 PM

43,200 கிலோ உப்பு பயன்படுத்தி 37,200 சதுர அடியில் இந்திய தேசியக் கொடி: வாணியம்பாடி மாணவர்கள் சாதனை

வாணியம்பாடியில் 43,200 கிலோ உப்பு, 1,600 கிலோ வண்ணப் பொடியை பயன்படுத்தி 37,200 சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமான இந்திய தேசியக் கொடியை 5 மணி நேரத்தில் வரைந்து மாணவர்கள் சாதனை படைத்தனர்.

குடியரசு தினத்தை முன்னிட்டு வேலூர் மாவட்டம், வாணியம்பாடி சிகரம் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் இந்த புதிய உலக சாதனையை நேற்று நிகழ்த்தினர். 72 மீட்டர் நீளமும், 48 மீட்டர் அகலமும் கொண்ட இந்திய தேசியக்கொடி படத்தை வரைய, 43 ஆயிரத்து 200 கிலோ உப்பு பயன்படுத்தப்பட்டது.

தேசியக் கொடியின் மேல்புறம் உள்ள காவி நிறத்துக்கு 650 கிலோ காவி வண்ணப்பொடியும், கீழ்புறம் உள்ள பச்சை நிறத்துக்கு 720 கிலோ பச்சை வண்ணப்பொடியும், கொடியின் மத்தியில் உள்ள சக்கரத்துக்கு 230 கிலோ நீல வண்ணப்பொடி என மொத்தம் 1,600 கிலோ வண்ணப்பொடி பயன்படுத்தப்பட்டது.

இதற்கு முன்பு, சிங்கப்பூரில் கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி 1,800 பேர் 18 மணி நேரத்தில் 22 ஆயிரத்து 410 சதுர அடி அளவில் வரையப்பட்டதே உலக சாதனையாக இருந்தது. இப்போது வாணியம்பாடி சிகரம் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 1,180 பேர் பங்கேற்று 37 ஆயிரத்து 200 சதுர அடி பரப்பளவில் தேசியக் கொடியை வரைந்து சிங்கப்பூர் சாதனையை முறியடித்துள்ளனர்.

சிங்கப்பூர் ஏசியன் ரெகார்ட்ஸ் அகாடமி நிறுவனத்தின் இந்திய ஆய்வு அதிகாரி எம்.எஸ்.இர்பான் அகமது, மும்பை இந்தியன் ரெகார்ட்ஸ் அகாடமியின் தமிழக, புதுச்சேரி மாநில மேலாளர் ஜெகந்நாதன், தமிழன் புக் ஆப் ரெகார்ட்ஸ் நிறுவன ஆய்வாளர் ராஜ்கிருஷ்ணா ஆகியோர் நேரில் ஆய்வு செய்து உலக சாதனைக்காக சான்றிதழ்களை மாணவ, மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் வழங்கினர்.

மேலும், லண்டன் எலைட் உலக சாதனை பிரைவேட் லிமிடெட் நிறுவனமும் இந்த உலக சாதனையை அங்கீகரிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. புதிய உலக சாதனை நிகழ்த்திய மாணவர்களை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆர்.நந்தகோபால், பள்ளி செயலாளர் பிரகாசம், துணைச் செயலாளர் விமலன் ஆகியோர் பாராட்டினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x