Published : 31 May 2016 01:54 PM
Last Updated : 31 May 2016 01:54 PM

300 ஆண்டுகள் பழமையான சிவன், விஷ்ணு, பிரம்மா இணைந்த ஏகபாத மூர்த்தி சிற்பம்

உத்தரகோசமங்கை கோயிலில் சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டு

ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங் கை கோயிலில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான சிவன், விஷ்ணு, பிரம்மா இணைந்த ஏகபாத மூர்த்தி சிற்பம், சேதுபதி மன்னர்களின் சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது.

இதுகுறித்து ராமநாதபுரம் தொல்லியல் மற்றும் வரலாற்று பாதுகாப்பு மைய நிறுவனர் வே. ராஜகுரு ‘தி இந்து’விடம் கூறியதாவது:

சிவலிங்கத்தில் இருந்து தோன்றியவை 64 சிவமூர்த்தங்கள் (வடிவங்கள்). இவற்றை அஷ்டாஷ்ட விக்கிரகங்கள் என ஆகமங்கள் கூறுகின்றன. இம்மூர்த்தங்களைச் சுருக்கி, சோமாஸ்கந்தர், நடராஜர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், அர்த்தநாரீஸ்வரர், உமா மகேஸ்வரர், வீரபத்ரர், பிட்சாடனர் உள்ளிட்ட இருபத்தைந்து மூர்த்தங்களாக உருவாக்கப்பட்டதாக உத்தரகாரண ஆகமம் கூறுகிறது. இதில் ஒன்று ஏகபாத மூர்த்தி ஆகும். சிவபெருமான் பத்மபீடத்தின் மீது ஒரே காலுடன் சமபங்கமாக நின்ற நிலையில் இருக்க, அவரது இடையின் வலப்பக்கம் பிரம்மாவும், இடப்பக்கம் விஷ்ணுவும் இணைந்து தோன்றுவது ஏகபாதமூர்த்தி திருக்கோலம். ஊழிக்காலம் எனப்படும் பிரளயங்கள் ஏற்படும்போது, உலகமே நீரில் மூழ்கி அழியும். அக்காலங்களில் உலகில் உள்ள அனைத்து உயிர்களும், உமையம்மையாகிய சக்தியும் இந்த ஏகபாதமூர்த்தியாகிய சிவபெருமானிடம் ஒடுங்கி விடுவர். ஊழிக்காலங்களில் இவர் மட்டுமே அழியாமல் இருப்பவர் என ஆகமங்களும், வேதங்களும் கூறுகின்றன. அனைத்து சக்திகளின் பிறப்பிடமாகவும், தஞ்சமடையும் இடமாகவும் ஏகபாதமூர்த்தி இருக்கிறார். ஏகபாதமூர்த்தி சிலைகள் தென்னிந்தியாவில் தான் அதிகமாக காணப் படுகின்றன. பிரம்மாவும், விஷ்ணுவும் ஒரு கால் வளைந்த நிலையிலும், முன்னிருகைகள் வணங்கி ய நிலையிலும் காணப்படுவதாக ஏகபாதமூர்த்தி சிற்பம் அமைக்கப்படுவது மரபு. இத்தகைய ஏகபாதமூர்த்தி சிற்பங்கள் கோயில் மண்டபத் தூண்களில் அமைக்கப்பட்டி ருக்கும். திருக்கோகர்ணம், மதுரை மீனாட்சியம்மன் கோயில், புதுமண்டபம் ஆகிய இடங்களில் உள்ள மண்டபத் தூண்களில் ஏகபாதமூர்த்தி சிற்பங்கள் உள்ளன.

உத்தரகோசமங்கை

உத்தரகோசமங்கையில் மரகத நடரா ஜர் சன்னதியின் வெளிப்புற வடக்குத் தேவகோட்டத்தில் ஏகபாதமூர்த்தி சிற்பம் உள்ளது. இங்குள்ள ஏகபாதமூர்த்தி சிற்பத்தில் நின்ற நிலையில் இருக்கும் சிவன், முன்னிரு கைகளில் அபய, வரத முத்திரைகளுடனும், பின்னிரு கைகளில் மான், மழுவை ஏந்தியும் காட்சி தருகிறார். பிரம்மா மூன்று தலைகளுடன் காணப் படுகிறார். பிரம்மாவும், விஷ்ணுவும் அமர்ந்த நிலையில் உள்ளனர். விஷ்ணு, பிரம்மாவின் கைகள் வணங்கிய நிலையில் இல்லாமல் அபய முத்திரையுடன் உள்ளன. மற்றொரு கையில் ஆயுதங்களை ஏந்தி உள்ளனர். மரகத நடராஜர் சன்னதி, கி.பி. 1678 முதல் 1710 வரை சேது நாட்டை ஆண்ட கிழவன் சேதுபதி காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுவதால், இந்த ஏகபாத மூர்த்தி சிற்பமும் அதே காலத்தைச் சேர்ந்ததாகக் கருதலாம். உத்தரகோசமங்கையில் உள்ளதை போலவே, சென்னை திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கோயிலிலும், நடராஜர் சன்னதியின் வெளிப்புற வடக்கு தேவ கோட்டத்தில் ஏகபாதமூர்த்தி சிற்பம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x